தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மகளிர் திட்டத்தின் மூலம், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டமானது உலக வங்கியின் நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட ஒரு தனித்துவம் வாய்ந்த திட்டம் ஆகும். இந்த திட்டம் வறுமை ஒழிப்பு எனும் செயல்பாட்டையும் தாண்டி தொழில் மேம்பாடு, நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் ஊரக சமுதாயத்தில் வளம் மற்றும் நிலைத்த உயர்வை உருவாக்கி பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக புத்தாக்க திட்டம் தூத்துக்குடி, சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி, கருங்குளம் ஆகிய 4 வட்டாரங்களில் உள்ளடக்கிய 105 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
தமிழக அரசு, கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஊரகப்பகுதியில் உள்ள பெண்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திடும் வகையில், மகளிர் திட்டத்தின் மூலமும் அதிக திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஏழை, எளிய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்திட பல்வேறு துறைகளின் மூலம் புள்ளி விவரங்களை பெற்று அதனடிப்படையில், திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. பல்வேறு துறை அலுவலர்கள் கிராமப்புற பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் புள்ளி விவரங்களை சரியான முறையில் வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், துணை செயலாக்க அலுவலர் ஜெயகணேஷ், இளநிலை செயலாக்க அலுவலர் நவீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.