ஆத்தூர்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் பாரதிபுரம் பவர்ஹவுஸ் அருகே வசிப்பவர் ராஜமாணிக்கம். தொழில் அதிபரான இவருக்கு மல்லியக்கரையில் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 35). இவரை கடந்த 18-ந் தேதி மாலை ஆத்தூர் மோட்டூர் கிராமத்தில் காரில் வந்த ஒரு கும்பல் கடத்திச் சென்றது. இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கடத்தல் கும்பல் சுரேஷ்குமாரை சேலம் பழைய பஸ் நிலையம் அருகே விடுவித்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் சுரேஷ்குமாரை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சுரேஷ்குமாரை பார்த்தவுடன் அவரது தந்தை ராஜமாணிக்கம், தாய் சுசீலா உஷா கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுதனர்.
இந்த கடத்தல் சம்பவம் குறித்து சுரேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 18-ந்தேதி மாலை 6 மணி அளவில் வீட்டில் இருந்து பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு புறப்பட்டு, காரில் சென்று கொண்டிருந்தேன். எனது காரை பின் தொடர்ந்து காரில் வந்த கும்பல், திடீரென்று எனது கார் முன்புறம் வேகமாக வந்து மோதி நிறுத்தியது. உடனே நான் கோபப்பட்டு காரில் இருந்து இறங்கி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அப்போது காரில் இருந்து இறங்கிய 3 பேர் கையில் இருந்த இரும்பு கம்பியால் என்னை அடித்தனர். மேலும் கைகளால் தாக்கினர். பின்னர் மேலும் 3 பேர் வந்து வாயை பொத்தி காரில் தூக்கிப்போட்டு கடத்திச்சென்றனர்.
ராசிபுரம் பிரிவு கூட்ரோடு என்ற இடம் அருகே சென்றபோது எனது வாய், கண் ஆகியவற்றில் டேப்பை வைத்து ஒட்டி, செல்லும் இடம் தெரியாமல் இருக்கவும், பேச முடியாதபடியும் செய்தனர். பின்னர் ஸ்பிரே மூலம் மயக்க மருந்து தெளித்ததால், நான் மயங்கி விட்டேன்.
பின்னர் என்னை ஒரு அறையில் அடைத்து வைத்திருந்தனர். அது வீட்டில் உள்ள அறையா? லாட்ஜ் அல்லது ஓட்டலில் உள்ள அறையா? என எனக்கு தெரியவில்லை. சத்தம் போடாமல் எங்களுடன் ஒத்துழைத்தால், அடிக்க மாட்டோம், தொந்தரவு செய்ய மாட்டோம் என கூறினர். மேலும் உணவு கொண்டு வந்து கொடுக்கும் போது கட்டி இருந்த கையை அவிழ்த்து விட்டனர். அடிக்கடி யாருடனோ போனில் பேசிய அந்த நபர்களுக்கு 25 வயது முதல் 35 வயது வரை இருக்கலாம். அவர்களை என்னால் அடையாளம் காட்ட முடியும்.
உனது தந்தை ஒருவருக்கு பணம் தர வேண்டும். அந்த தொகையை நாங்கள் வசூல் செய்யும் வரை அமைதியாக இருக்க வேண்டும் என எச்சரித்தனர். பின்னர் 19ந்? தேதி இரவு சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தெருவில் என்னை இறக்கிவிட்டு 500 ரூபாய் கொடுத்து விட்டு சென்றுவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சூரியமூர்த்தி, ராஜூ மற்றும் தனிப்படை போலீசார் சுரேஷ்குமாரை கடத்தி சென்ற கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.