சேவூர்,
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், அவினாசி வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி பாலமுருகன் மற்றும் குழுவினர் நேற்று முன்தினம் சேவூரில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சேவூரில் உள்ள மெயின்ரோடு, புளியம்பட்டிரோடு மற்றும் குன்னத்தூர் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக்கடை, பேக்கரி, மளிகை கடை உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களில் உணவு இதபாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 2 கிலோ எடையுள்ள குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்களை, பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக 3 கடைகளில் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன் அந்த கடைக்காரர்களுக்கு அபராதமாக தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15 ஆயிரம் விதிக்கப்பட்டது. இதற்கான ஆணை கடைக்காரர்களிடம் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறுகையில், இந்த தவறான செயல் முதல் முறை என்பதாலும், மேலும் தொடரும்பட்சத்தில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ 25 ஆயிரம் வரை அபராதம் விதிப்பதோடு கடையின் பதிவு சான்று ரத்து செய்யப்படும். அத்துடன் உணவு வணிகம் செய்ய உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம், அல்லது பதிவுச்சான்று பெறுவது கட்டாயம் எனவும், உணவு பாதுகாப்புச்சட்டவிதி, மற்றும் நெறிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர்களின் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஆய்வின் போது பேக்கரியில் உணவு பொருட்களை செய்திதாளில் பேக்கிங் செய்து விற்கக்கூடாது
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப்பைகளை பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் உணவு பொருட்களின் தரம், கலப்படம், பான்மசாலா, குட்கா,புகையிலை ஆகியன குறித்து பொதுமக்கள் புகார்களை 94440 42322 என்கிற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றனர்.