புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் கேள்வி-பதில் நேரத்தில் மாகி தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-
ராமச்சந்திரன்:- எத்தனை மாதம் 20 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
முதல்-அமைச்சர் நாராயணசாமி:- இந்த ஆட்சி தொடக்கத்திலிருந்து 20 கிலோ வீதம் 7 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளது. பின்னர் 4 மாதங்களுக்கு சிவப்பு கார்டுகளுக்கு 15 கிலோ இலவச அரிசி மற்றும் 5 கிலோ கோதுமை, மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை வழங்கப்பட்டது. பின்னர் இலவச அரிசிக்கு இணையான பணம் 5 மாதங்களுக்கு போடப்பட்டது.
அன்பழகன்:- ஆட்சி அமைந்து 39 மாதமாகிறது. எத்தனை முறை அரிசி கொடுத்துள்ளர்கள்?
அமைச்சர் கந்தசாமி:- 17 மாதம் அரிசி கொடுத்துள்ளோம். 5 மாதம் பணம் கொடுத்துள்ளோம். இந்த பட்ஜெட்டில் முதல்-அமைச்சர் பணம் ஒதுக்கி உள்ளார். அந்த கோப்பு கவர்னர் மாளிகைக்கு அனுப்பி 20 நாட்கள் ஆகிறது. ஆனால் ஒப்புதல் வரவில்லை. அரிசி போடுவதை அவர் தடுக்கிறார்.
சிவா:- நீங்கள் அரிசி போடாவிட்டால் அதற்கான பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்துங்கள்.
அன்பழகன்:- 17 மாதம் அரிசியும் போடவில்லை. பணமும் போடவில்லை. அதற்காக ஒதுக்கிய பணம் எங்கே போனது?
நாராயணசாமி:- முதலில் 30 கிலோ இலவச அரிசி அறிவித்தோம். ஆனால் முதலில் 20 கிலோ அரிசி போட்டு தொடங்கினோம். 2016-17ல் 6 மாதம் அரிசி வழங்கினோம். ஆனால் கவர்னர் அரிசி போடக்கூடாது. பணமாக வழங்கவேண்டும் என்றார். அதற்கான கோப்பினை 4 மாதம் நிறுத்தி வைத்து திருப்பி அனுப்பினார். ஆனால் அரிசி வழங்குவது அமைச்சரவை முடிவு. அதனை செயல்படுத்த வேண்டும் என்று மீண்டும் கோப்பு அனுப்பினோம்.
அதன்பின் தற்காலிகமாக அரிசி வழங்க கூறினார். அதையும் பல்வேறு சோதனைகளுக்கு பின்னரே தரவேண்டும் என்றார். அதன்படி 4 மாதம் கொடுத்தோம். அதன்பின் மீண்டும் பணம்தான் கொடுக்கவேண்டும் என்றார். அதனால் அரிசி போடமுடியவில்லை. இந்த அரசு 2019-20ம் நிதியாண்டிற்கு ரூ.160 கோடி ஒதுக்கி உள்ளது. அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிடக் கூடாது என்று ஐகோர்ட்டு கூறியுள்ளது. ஆனால் அரிசிபோட கவர்னர் முட்டுக்கட்டை போடுகிறார். இதுதொடர்பாக ஐகோர்ட்டில் தெரிவிக்க உள்ளோம்.
அன்பழகன்:- பணம் போடுவதோ, அரிசி போடுவதோ எதுவாக இருந்தாலும் அது உங்கள் முடிவு. கவர்னரும், அரசும் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறீர்கள். கவர்னர், அரசை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.
(இவ்வாறு கூறிவிட்டு அன்பழகன் எம்.எல்.ஏ. சட்டசபையிலிருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வெளியேறினார்கள்)
சாமிநாதன்:- அரிசி தொடர்பாக நான் கவர்னரிடம் பேசியுள்ளேன். கடந்த காலங்களில் தரமில்லாத அரிசி போடப்பட்டது. இதனால் சி.பி.ஐ. விசாரணையும் நடக்கிறது. 99 சதவீத மக்கள் பணம் போடுவதில் ஆட்சேபனையில்லை என்று கூறுகிறார்கள்.
அனந்தராமன்:- அரிசிதான் வேண்டும் என்று பொதுமக்கள் கேட்கிறார்கள். நாங்கள் தரமான அரிசியை தருகிறோம்.
அமைச்சர் நமச்சிவாயம்:- மக்கள் அரிசியைத்தான் விரும்புகிறார்கள்.
சபாநாயகர் சிவக்கொழுந்து:- சாமிநாதன் தவறான தகவலை கொடுக்கக்கூடாது.
அனந்தராமன்:- பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்தினால் அதை குடும்ப தலைவர் எடுத்து தவறான வழியில் செலவழித்துவிடுவார். பணத்தை கொடுக்க சொல்ல நீங்கள் யார்? மக்களுக்கு அரிசி கொடுப்பதுதான் எங்கள் தேர்தல் வாக்குறுதி. அதைத்தான் கொடுக்கவேண்டும்.
அமைச்சர் கந்தசாமி:- மாநில அரசுக்குத்தான் அதிகாரம் என்று கோர்ட்டு கூறியுள்ளது.
சிவா:- உங்கள் அதிகார போட்டியை தனியாக வைத்துகொள்ளுங்கள். முதலில் மக்களுக்கு பதில் சொல்லுங்கள்.
அமைச்சர் கந்தசாமி:- இதில் சபாநாயகர் உரிய உத்தரவினை பிறப்பிக்கவேண்டும்.
நாராயணசாமி:- மத்திய அரசு அரிசி கொடுப்பதை ஏற்கிறார்கள். ஆனால் மாநில அரசு அரிசி கொடுக்கக்கூடாதா? பாகூர், கிருமாம்பாக்கம், திருக்கனூர் பகுதிகளில் அரிசி போடாமல் ஊருக்குள் நுழையக்கூடாது என்று கவர்னருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திட்டம் ரூ.50 கோடிக்கும் மேலான திட்டம் என்பதால்தான் கவர்னருக்கு கோப்பு அனுப்பினோம். 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் எங்களை ஜெயிக்க வைத்தது ஏன் என்று மக்களின் மனநிலை புரிந்து கவர்னர் செயல்பட வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
தொடர்ந்து பூஜ்ய நேரத்தின்போதும் இந்த பிரச்சினை எழுந்தது. அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
அமைச்சர் கந்தசாமி:- இலவச அரிசி போடுவது முக்கிய பிரச்சினை. இப்போதே சபையை ஒத்திவைத்து கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ. வீதம் சென்று கவர்னரை சந்தித்து ஒப்புதல் வழங்க கூறலாம்.
அன்பழகன்:- அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. உங்களுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று கோர்ட்டு கூறியுள்ளது. எனவே கவர்னரை சந்திக்க நாங்கள் வரமாட்டோம்.
சிவா:- வரக்கூடிய எம்.எல்.ஏ.க்களை அழைத்து சென்று பார்க்கலாம்.
அன்பழகன்:- அனைவருக்கும் அரிசி வழங்க சபையில் தீர்மானம் போடுங்கள். நாங்கள் ஆதரிக்கிறோம்.
சிவா:- அரிசி போட முடியாவிட்டால் மக்களுக்கு பணத்தை கொடுங்கள்.
சபாநாயகர்:- கவர்னரை நேரில் சந்தித்து கேட்டுவிட்டு பின்பு தீர்மானம் போடலாம். இவ்வாறு விவாதம் நடந்தது.