மாவட்ட செய்திகள்

வீடுகளை அகற்ற போவதாக நோட்டீசு கலெக்டர் அலுவலகம் முன்பு ஒப்பாரி வைத்து போராட்டம்

திருவண்ணாமலை அருகே கீழ் அணைக்கரை கிராமத்தில் போக்குவரத்துக்கு இடையுறாக உள்ள வீடுகளை அகற்றப்போவதாக கூறி நோட்டீசு வழங்கப்பட்டுள்ளதால், கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குறைத்தீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி தலைமை தாங்கினார். தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்தும், கூட்ட அரங்கில் பொது மக்களிடம் இருந்தும் கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றார்.

இதில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன், திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, சாதிச்சான்று, வேலை வாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை என்பது உள்பட 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.

கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.

திருவண்ணாமலையை அடுத்த கீழ்அணைக்கரை கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 50 பேர் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் தங்கள் வீடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும், அதனால் வீடுகளை அகற்ற போவதாக அதிகாரிகள் நோட்டீசு வழங்கி உள்ளதாகவும் எனவே தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்றுகூறி கலெக்டர் அலுவலகம் முன்பு ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரின் காலில் விழுந்து கதறினர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் குறைத்தீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர்.

செங்கம் கண்ணக்குருக்கை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு வாசுதேவன்பட்டு, மேலப்புஞ்சை கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பாய்ச்சல் கிராமத்திற்கு வந்து பஸ் மூலம் ஊருக்கு செல்ல வேண்டும். 10 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் சிறப்பு வகுப்பு முடிந்து வீட்டிற்கு செல்ல ஏறக்குறைய 2 மணி நேரம் பஸ் நிறுத்தத்தில் காத்து இருக்கின்ற நிலை உள்ளது. மேலும் பஸ் நிறுத்தம் அருகே அரசு மதுபானக்கடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலையில் இருந்து புதுப்பாளையம் நோக்கி செல்லும் அரசு பஸ் வழிதடம் எண் 318-ஐ நேரம் மாற்றி, அதாவது கண்ணக்குருக்கை கிராமத்திற்கு மாலை 4.30 மணிக்கு வரும் அந்த பஸ்சை 5.50 மணி அளவில் வரும்படி நேரத்தை மாற்றி அமைத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை