மணப்பாறை,
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு எம்.ஜி.ஆர். நகர். இந்த பகுதியில் சுமார் 120-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் சமீப காலமாக வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே காவிரி குடிநீர் வினியோகம் செய்து வந்ததாக கூறப்படுகின்றது. அதுவும், சுமார் 30 நிமிடம் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானதுடன், குடிநீரை விலை கொடுத்து வாங்கி வந்துள்ளனர். தற்போது குடிக்க கூட தண்ணீர் இன்றி கடும் அவதிக்கு ஆளான மக்கள் இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் நேற்று காலை மணப்பாறை-புதுக்கோட்டை சாலையில் பாரதியார் நகர் அருகே காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, முறையாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.