நாகப்பட்டினம்:
நாகையில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதன் ஒரு பகுதியாக நாகை அவுரி திடலில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ.. தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் ஜீவானந்தம், அமைப்பு செயலாளர் ஆசை மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் தங்க. கதிரவன் வரவேற்றார்.
சொத்துவரி உயர்வு
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட பொருளாளர் சண்முகராஜ், மாவட்ட துணை செயலாளர் அபுசாலி, இணை செயலாளர் மீனா உள்பட 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.