நாமக்கல்,
நாமக்கல் நகராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட சின்னமுதலைப்பட்டி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து, போலீஸ் சூப்பிரண்டு அருளரசுவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
பின்னர் அவர்கள் இதுகுறித்து கூறியதாவது:-
நாமக்கல் ஏ.எஸ். பேட்டையில் கடந்த 10 ஆண்டுகளாக ஒருவர் தீபாவளி பலகார சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் வாரம்தோறும் ரூ.100, ரூ.200, ரூ.300, ரூ.500 என செலுத்தி வந்தோம். ஒருசிலர் மாதம் ரூ.1,000 வீதம் செலுத்தி வந்தனர்.
50 வாரம் முழுமையாக செலுத்தியவர்களுக்கு 51-வது வாரத்தில் வட்டியுடன் பணம் திரும்பி வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார். மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பணம் பெற்றுக் கொண்டு, அவரவர்களுக்கு தனித்தனியாக அட்டை வழங்கி பதிவு செய்தும் கொடுத்தார்.
இந்த நிலையில் 50 வாரம் பணம் கட்டிய சிலர் முதிர்வு தொகை கேட்டு உள்ளனர். ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்து உள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. எனவே சுமார் ஆயிரம் பேரிடம் ஏறத்தாழ ரூ.1 கோடி தீபாவளி சீட்டு வசூல் செய்து மோசடி செய்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் கட்டிய பணம் திரும்ப கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.