மாவட்ட செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் மோசடியில் ஈடுபடும் கும்பல் மீது கடும் நடவடிக்கை

நீலகிரி மாவட்டத்தில் மோசடியில் ஈடுபடும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

தினத்தந்தி

ஊட்டி

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த முரளி ரம்பா தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து சென்னை மாநகர வடக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றிய சண்முகப் பிரியா நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று அவர் ஊட்டியில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதன்பின்னர் போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்று (அதாவது நேற்று) நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்று உள்ளேன். லஞ்ச ஒழிப்புத்துறையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக இருக்கும் போது, சில வழக்கு காரணமாக நீலகிரியில் ஒரு சில பகுதிகளுக்கு வந்து உள்ளேன். நீலகிரி மாவட்டம் குறித்து முழுமையாக 15 நாட்களில் தெரிந்துகொள்வேன். அதன் பின்னர் சில பணிகள் மேற்கொள்ளப்படும். நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். அதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.

குற்றங்கள் குறைவாக இருந்தாலும், ஒரு சில கிராமங்களில் திருட்டு நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் நீலகிரியில் மோசடி கும்பல் மக்களை ஏமாற்றுவதாக தெரிய வந்து உள்ளது. இதுகுறித்து விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.

நீலகிரி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற சண்முகப்பிரியா ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த 2003-ம் ஆண்டு நேரடி போலீஸ் துணை சூப்பிரண்டாக தேர்வு பெற்று, நாமக்கல்லில் பயிற்சி போலீஸ் துணை சூப்பிரண்டாகவும், அரியலூர் மாவட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டாகவும், கோவையில் போக்குவரத்து உதவி போலீஸ் கமிஷனராகவும், 2008-ம் ஆண்டு முதல் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாகவும் கோவை மற்றும் சென்னையில் பணிபுரிந்து உள்ளார்.

புதியதாக பொறுப்பேற்ற அவரை போலீஸ் துணை சூப்பிரண்டுகள் திருமேனி (ஊட்டி), சங்கு (ஊட்டி ஊரகம்), கஜேந்திரன் (ஆயுதப்படை) மற்றும் போலீசார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை அர்ச்சனா ராமசுந்தரம், பாலநாகதேவி, வித்யா குல்கர்னி ஆகிய 3 பேர் பெண் போலீஸ் சூப்பிரண்டுகளாக பணிபுரிந்து உள்ளனர். தற்போது நான்காவதாக சண்முகப்பிரியா பெண் போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?