ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தாமிரபரணிகூட்டுக்குடிநீர் மற்றும் செண்பகத்தோப்பு பகுதியில் இருந்து 4 நாளைக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்படுகிறது.
மேலும் பருவமழை 2 ஆண்டுகளாக பொய்த்துப்போனதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போனது. இதனால் மற்ற உபயோகத்துக்கும் தண்ணீர் கிடைக்காமல் அனைவரும் அல்லாடி வருகின்றனர். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து ஊரக பகுதிகளில் கூடுதல் தண்ணீர் பெற்று 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் நகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலை இருந்தது. மேலும் செண்பகத்தோப்பு பகுதியில் இருந்து நீர் கொண்டு வரவும் அதிகாரிகள் முனைப்பு காட்டவில்லை.
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அதிகாரிகளுடன் சந்திரபிரபா எம்.எல்.ஏ. குடிநீர் வினியோகம், சுகாதாரப் பணிகள், தெரு விளக்கு பராமரிப்பு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் நகராட்சி ஆணையாளர் முகமது முகைதீன், பொறியாளர் ராமலிங்கம், நகரமைப்பு அலுவலர் மதியழகன், குடிநீர் வினியோக மேற்பார்வையாளர்அழகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து கூடுதல் தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். 20 நாட்களுக்கு ஒரு முறை வரும் குடிநீரை சேமித்து வைத்து பயன்படுத்துவதால் நோய் பரவும் அபாயம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் வாரத்துக்கு ஒரு முறை குடிநீர் வழங்கிட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து அவர் நகரில் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். அங்கு போதுமான நீர் ஆதாரங்கள் இல்லாததால் உள் மற்றும் வெளி நோயாளிகளும், ஆஸ்பத்திரி ஊழியர்களும், பொதுமக்களும் சிரமப்படும் நிலை இருந்தது. இதனைதொடர்ந்து தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஆழ்குழாய் கிணறு அமைக்க ஏற்பாடு செய்ததாகவும் குறிப்பிட்டார்.