மாவட்ட செய்திகள்

நமது நாட்டில் சாதிக்குத்தான் முன்னுரிமை கிடைக்கிறது - துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் வேதனை

“நமது நாட்டில் சாதிக்குத்தான் முன்னுரிமை கிடைக்கிறது” என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் வேதனை தெரிவித்தார்.

சித்ரதுர்கா,

பெலகெரே சலவாதி கட்டேமனே அமைப்பு சார்பில் சலவாதி ரத்னா என்ற விருது வழங்கும் விழா சித்ரதுர்கா மாவட்டம் பெலகெரே கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்காவுக்கு சலவாதி ரத்னா விருது வழங்கி பேசியதாவது:-

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் தொழில் அடிப்படையில் சாதியை நிர்மாணம் செய்தனர். இன்று இந்த சாதி பெரிய அளவில் வேரூன்றிவிட்டது. மேல் சாதி, கீழ் சாதி, மிகவும் கீழ் சாதி என்றெல்லாம் அழைக்கிறார்கள். சலவாதி சமூகத்தை மிகவும் கீழ் சாதி என்று அடையாளப்படுத்துகிறார்கள். இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் சாதி முறை இந்த அளவுக்கு இல்லை. நமது நாட்டில் சாதிக்குத்தான் முன்னுரிமை கிடைக்கிறது.

ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் நல்ல கல்வி கற்றுள்ளனர். அதேபோல் அனைவரும் கல்வி பயின்றால் இந்த சாதி முறையை ஒழிக்க முடியும். ஆதிதிராவிடர்கள் ஒருவேளை உணவு சாப்பிடாமல் இருந்தால் கூட பரவாயில்லை, தங்களின் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். சிறந்த கல்வியை பெற்றால், அதிகாரம் ஆதி திராவிடர்களை தேடிச் செல்லும்.

திறமைக்கு சாதி கிடையாது. உலகிலேயே சிறந்த அரசியல் சாசனத்தை உருவாக்கி கொடுத்த அம்பேத்கரின் திறமைக்கு சாதி குறுக்கே வரவில்லை. சாலுமரத திம்மக்கா மரங்களை நட்டு சாதனை படைத்துள்ளார். இந்த சாதனைக்கு சாதி குறுக்கே வரவில்லை. அவர் தனது திறமை, சமூக ஈடுபாட்டால் மரங்களை நட்டு நமக்கு முன் உதாரணமாக திகழ்கிறார். நான் எனது திறமையால் இந்த பதவிக்கு வந்துள்ளேன்.

அரசியலில் எந்த சூழ்நிலையிலும் திருப்பம் ஏற்படலாம். நமது வாழ்க்கையில் எளிமையை வளர்த்துக் கொள்வது மிக முக்கியம். சாலுமரத திம்மக்கா ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். குழந்தைகள் இல்லாததால் அவர் ஏமாற்றம் அடையவில்லை. மரக்கன்றுகளை நட்டு அவற்றை தனது குழந்தைகளைப் போல் வளர்த்து இருக்கிறார்.

அவர் பள்ளிக்கு சென்றது இல்லை. ஆனால் அவர் தனக்கு இருந்த அறிவு மற்றும் சமூக அக்கறையால் சாதிகளை கடந்து இந்த சமுதாயமே பாராட்டும் விதமாக பணியாற்றி உள்ளார். இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.

பரமேஸ்வரிடம் நிருபர்கள், அரசு பள்ளி குழந்தைகளுக்கு மட்டும் இலவச பஸ் பாஸ் வழங்குவதாக முதல்-மந்திரி அறிவித்துள்ளார். தனியார் பள்ளி குழந்தைகளுக்கு எப்போது வழங்குவீர்கள்? என்று கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த பரமேஸ்வர், இப்போது முதல்கட்டமாக அரசு பள்ளி குழந்தைகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். அடுத்த கட்டத்தில் தனியார் பள்ளி குழந்தைகளுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். எங்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ராஜண்ணா, கூட்டணி ஆட்சியின் ஆயுட்காலம் குறைவு என்று கூறி இருக்கிறார். இது அவருடைய தனிப்பட்ட கருத்து. எங்கள் கூட்டணி அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்றார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை