பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பழவேற்காடு பகுதியான இடையான்குளம் கிராமத்தில் வசிப்பவர் சூரியபிரகாஷ் (வயது 24). ஆட்டோ டிரைவர். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்ததாக கூறப்படும் நிலையில், நேற்று மாலை பழவேற்காடு கடைவீதிக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிபோது, இடையான்குளம் பஸ் நிலையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று சூரியபிரகாசை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது.
இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த கிடந்த சூரியப்பிரகாசை அக்கம் பக்கத்தினர் மீட்டு, பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்த திருப்பாலைவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மதியரசன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சூரியபிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, பொன்னேரி போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி கொலை நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணையில் ஈடுபட்டார். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பழவேற்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.