திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் காந்தி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 40). டி.வி.மெக்கானிக். இவர் கடந்த 20 ஆண்டுகளாக பேரம்பாக்கம் பகுதியில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் பேரம்பாக்கம், கூவம், குமாரச்சேரி, களாம்பாக்கம், நரசிங்கபுரம், இருளஞ்சேரி போன்ற சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் வரை சீட்டில் சேர்ந்து மாதம்தோறும் பணம் செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஏலசீட்டு முடியும் தறுவாயில் இருந்தவர்கள் தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கேட்டபோது பணத்தை தருவதாக கூறி காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் மோகன் கடந்த 30-6-2019 அன்று தன்னுடைய வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டார். ஏலச்சீட்டில் பணம் செலுத்தியவர்களிடம் மோகன் ரூ.1 கோடிக்கு மேலாக மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. ஏலச்சீட்டில் பணம் செலுத்தியவர்கள் பல இடங்களில் தேடியும் மோகன் கிடைக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணப்பன் இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவன், வேலு, பாலாஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மோகனை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மோகன் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து போலீசார் பெங்களூரு சென்று அங்கு பதுங்கியிருந்த மோகனை கைது செய்து திருவள்ளூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.