புளியங்குடி,
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நேற்று முன்தினம் வரை 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
புளியங்குடியில் நோய் தொற்று அதிகமாக காணப்படுவதால் நகர் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தொற்று மேலும் பரவாமல் தடுக்க நகரசபை சுகாதார ஊழியர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகள் முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டு உள்ளது.
தொற்று பாதிக்கப்பட்டு உள்ள பகுதிகள் மற்றும் புளியங்குடி நகரின் அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு பணிகளில் காவல்துறையினர், நகரசபை ஊழியர்கள், சுகாதாரத்துறையினர், வருவாய் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 5 பேருக்கு கொரோனா
இந்த நிலையில் நேற்று முன்தினம் பலரது சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதில் 4 பெண்கள் உள்பட 5 பேருக்கு நோய் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து புளியங்குடியில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30-ல் இருந்து 35 ஆக அதிகரித்து உள்ளது. இதன்மூலம் தென்காசி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து இருக்கிறது. இதையொட்டி புளியங்குடி நகர் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.