மாவட்ட செய்திகள்

சங்கரன்கோவிலில் பரபரப்பு: மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் 2 மாணவர்கள் திடீர் சாவு கலெக்டர் ஷில்பா நேரில் ஆய்வு

சங்கரன்கோவிலில் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் படித்த 2 மாணவர்கள் திடீரென்று இறந்தனர். இதனால் அந்த பள்ளியில் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு பள்ளிக்கூட வளாகத்தில் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 63 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 45 மாணவர்கள் அங்கேயே தங்கியிருந்து படிக்கின்றனர். இதில் கரிசல்குளத்தை சேர்ந்த கமலக்கண்ணன் மகன் மணிகண்டன் (வயது 13), ரெட்டியபட்டியை சேர்ந்த சண்முகபாண்டி மகன் பொன்னுச்சாமி ஆகியோரும் இந்த பள்ளியில் படித்து வந்தனர்.

இதில் மணிகண்டனுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவனை சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மணிகண்டன் இறந்தான். தொடர்ந்து பொன்னுச்சாமிக்கு நேற்று முன்தினம் திடீரென்று வாந்தி, பேதி ஏற்பட்டு உள்ளது. இதை அறிந்த அவருடைய பெற்றோர் பொன்னுச்சாமியை தங்களது வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். பின்னர் அவரை கரிவலம்வந்தநல்லூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அதை தொடர்ந்து சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் பொன்னுச்சாமி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த சுகாதார பணிகள் இணை இயக்குனர் நளினி தலைமையில் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் குருசாமி, டாக்டர்கள் சுந்தன், ராஜரத்தினம், அனிதா ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். அங்கு படித்து வரும் அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது மேலும் 4 மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து உடனடியாக 4 பேரும் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் 3 பேருக்கு சிகிச்சை அளித்து, தொடர் சிகிச்சை பெறுவதற்கு அறிவுறுத்தி வெளிநோயாளியாக அனுப்பி வைத்தனர். கிருஷ்ணன் என்ற மாணவர் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் முகைதீன் அப்துல்காதர் தலைமையில் சுகாதார அலுவலர் பாலச்சந்தர் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டனர். பள்ளிக்கூடம் மற்றும் சுற்றுப்பகுதியில் நோய் தடுப்பு மருந்து தெளித்தனர். அங்கிருந்த குப்பைகளை அகற்றினர். குடிநீரில் காய்ச்சலை பரப்பும் புழுக்கள் ஏதும் உள்ளதா? என்று ஆய்வு செய்து தடுப்பு மருந்து ஊற்றினர். இதுதவிர சங்கரன்கோவில் தாசில்தார் ஆதிநாராயணன், மண்டல துணை தாசில்தார் பரமசிவன் ஆகியோர் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் ஆகியோர் நேற்று மாலையில் பள்ளிக்கூடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் கலெக்டர் ஷில்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது பள்ளி முழுவதும் ஆய்வு மேற்கொண்டோம். மணிகண்டன் இருதய நோயால் இறந்தது தெரியவந்து உள்ளது. பொன்னுச்சாமி எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளோம். மேலும் பள்ளிக்கு தனியாரிடம் இருந்து தண்ணீர் வாங்கப்பட்டு வருகிறது. அதை நகராட்சி மூலம் வாங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு வெளியில் இருந்து உணவு வாங்காமல் பள்ளியிலேயே தயாரித்து வழங்கும்படி அறிவுறுத்தி உள்ளேன். மாணவர்கள் இறந்ததற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து முழுமையான விசாரணை முடிந்த பிறகு தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், சுகாதார துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

சங்கரன்கோவிலில் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் படித்த 2 மாணவர்கள் அடுத்தடுத்து இறந்த சம்பவத்தை அறிந்த, மற்ற மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த பள்ளியில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்