செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பி.டி.மூர்த்திநகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27). இவர், செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை அருகே துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர், அபிராமி பிளாக்கைச்சேர்ந்த கார்த்திக் (23), செங்குன்றம் அடுத்த ஜோதி நகரைச் சேர்ந்த வெங்கடேசன் (26), செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பாலகணேஷ் நகரை சேர்ந்த ஆல்பர்ட்(20) ஆகியோர் ராஜேசை கத்தியை காட்டி மிரட்டி, நாங்கள் பிரபல ரவுடிகள். எங்களுக்கு ரவுடி மாமூல் தரவேண்டும் என்றனர்.
அதற்கு ராஜேஷ் மாமூல் தரமறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் ராஜேஷ் மற்றும் அவரது கடை ஊழியர் ஜெய்ராஜ் ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரம் மற்றும் கடையில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்பிலான துணிகளை கொள்ளையடித்து சென்றனர்.
இதுபற்றி ராஜேஷ் அளித்த புகாரின்பேரில் செங்குன்றம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழழகன் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக், வெங்கடேசன், ஆல்பர்ட் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான துணிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.