மாவட்ட செய்திகள்

நாகையில், பட்டப்பகலில் பயங்கரம் ரவுடி சரமாரி வெட்டிக்கொலை கொலையாளிகளுக்கு வலைவீச்சு

நாகையில், பட்டப்பகலில் ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாகப்பட்டினம்,

நாகை அருகே உள்ள பாப்பாகோவிலை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மகன் செந்தில்குமார்(வயது 34). பிரபல ரவுடியான இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்ளன. இவர் தற்போது அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீன் ஏற்றும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று மாலை 4 மணியளவில் செந்தில்குமார் நாகை கோட்டைவாசல்படி நடராஜபிள்ளை தெரு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் திடீரென செந்தில்குமாரை வழிமறித்தனர். இதனால் செந்தில்குமார் தான் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது அவரை சுற்றி வளைத்த மர்ம நபர்கள் திடீரென அரிவாளால் செந்தில்குமாரை சரமாரியாக வெட்டினர். இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மர்ம நபர்கள் வெட்டியதில் தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் திடீரென ஒருவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதால் அதைப்பார்த்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து போலீசார் செந்தில்குமார் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட செந்தில்குமார் மீது நாகை டவுன் போலீஸ் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இதற்கு பழிதீர்க்க இந்த கொலையை மர்ம நபர்கள் அரங்கேற்றி இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மேலும் கொலை நடந்த நாகை கோட்டைவாசல்படி பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட செந்தில்குமாருக்கு செந்தமிழ்செல்வி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

பட்டப்பகலில் ரவுடி ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் நாகை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த பகுதியில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை