நெல்லை,
தென்காசியில் அமைப்பு சாரா தொழிலாளர் வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.
இதுகுறித்து நெல்லை சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையாளர் மின்னல் கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சிறப்பு முகாம்
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் இதர 16 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
வாரியத்தில் பதிவு பெறாத கட்டுமானம், ஆட்டோ ஓட்டுனர்கள், கைத்தறி, விசைத்தறி, தையல் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தென்காசி தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடக்கிறது.
ஆவணங்கள்
விண்ணப்பத்துடன் 2 புகைப்படங்கள், ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், வயது தொடர்பான பிறப்பு சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ் அல்லது ஓட்டுனர் உரிமம் நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றின் சான்றொப்பமிட்ட நகலுடன் நேரில் வர வேண்டும்.
அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட உடன் பெற்றுக் கொள்ளலாம். மனுதாரர்கள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற இயலாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.