பெங்களூரு,
டெல்லியில் உள்ள மாநிலங்களவை போன்று கர்நாடகத்தில் மேல்-சபை உள்ளது. மேல்-சபையானது மொத்தம் 75 உறுப்பினர்களை கொண்டதாகும். மேல்-சபை தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதாபசந்திர செட்டி இருக்கிறார். கர்நாடக சட்ட சபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கர்நாடக மேல்-சபையில் ஒப்புதல் பெற்று அமல்படுத்துவது தான் மரபாக உள்ளது.
அதன்படி, நிதி மசோதாவை தாக்கல் செய்ய நேற்று கர்நாடக மேல்-சபைக்கு புதிய முதல்-மந்திரி எடியூரப்பா முதல் முறையாக சென்றார். பின்னர் 3 மாதத்துக்கு தேவையான நிதி மசோதாவை எடியூரப்பா அவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவுக்கு சபை உறுப்பினர்கள் ஒருமனதாக ஒப்புதல் அளித்தனர். இதன்மூலம் கர்நாடக மேல்-சபையிலும் நிதி மசோதா அங்கீகரிக்கப்பட்டது. நிதி மசோதா மீது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பட்டீல், சி.எம்.இப்ராகிம் ஆகியோர் பேசினர்.
அதன்பிறகு மேல்-சபையில் முதல்-மந்திரி எடியூரப்பா பேசும்போது, பழிவாங்கும் அரசியலை நான் ஈடுபட போவது இல்லை. மக்கள் சேவையை சிறப்பாக செய்ய முடிவு செய்துள்ளேன். சாதி, மதம் பாகுபாடு இன்றி மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவேன். விவசாயிகளுக்கான நலனை காக்க முயற்சிப்பேன். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
மாநிலத்தில் புதிதாக விமான நிலையங்கள் அமைக்க பாடுபடுவேன். வடகர்நாடகம் மற்றும் ஐதராபாத்-கர்நாடக பகுதி வளர்ச்சி பணிகளில் அதிக கவனம் செலுத்துவேன். நீர்ப்பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன். கிருஷ்ணா மேல்-அணை திட்டத்தை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடியிடம் நிதியுதவி கேட்பேன் என்றார்.
பின்னர் கர்நாடக மேல்-சபையில் ஒப்புதல் பெறப்பட்ட நிதி மசோதா, கர்நாடக சட்டசபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, சபாநாயகர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட கர்நாடக சட்டசபை நேற்று மாலை 5 மணிக்கு துணை சபாநாயகர் கிருஷ்ணா ரெட்டி தலைமையில் தொடங்கியது. அப்போது, கர்நாடக மேல்-சபையில் நிதி மசோதா திருத்தங்கள் இன்றி ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது என்று கிருஷ்ணா ரெட்டி கூறினார்.
இதன்மூலம் கர்நாடக சட்டசபை, மேல்-சபையில் ஒரே நாளில் நிதி மசோதா எந்த பிரச்சினையும் இன்றி நிறைவேறியது. மேலும் கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், நிதி மசோதா நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் முதல்-மந்திரி எடியூரப்பா தாக்கல் செய்த நிதி மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.