சென்னை,
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் கணேசமூர்த்தி (வயது 29). இவர் அப்பகுதியில் ஆவின் பால் பூத் கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் கடந்த 4-ந்தேதி ரூ.14 ஆயிரத்து 500 பணம் திருட்டு போனது. கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியிருந்தனர். இதுகுறித்து கணேசமூர்த்தி, அபிராமபுரம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதில் குற்றவாளிகள் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர். அதன்படி இந்த வழக்கில் தியாகராயநகர் டாக்டர் தாமஸ் சாலை பகுதியை சேர்ந்த அவதார் கார்த்திக் (23), அம்மி (23), தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலையை சேர்ந்த மணி என்கிற நரி (22) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் சம்பவத்தன்று 3 பேரும் வேளச்சேரியில் மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு வரும் வழியில் ஆவின் பூத் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடியதும், இவர்கள் 3 பேர் மீது மாம்பலம், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், சூளைமேடு ஆகிய போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.