மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

கடலூர்,

கடலூர் மாவட்டம் காரைக்காடு ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் 2020-21 திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் 4 ஆழ்துளை கிணறுகளுடன் கூடிய 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்படுகிறது. மேலும் இதன் மூலம் 460 குடிநீர் இணைப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல் சிலம்பிமங்கலத்தில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் 3 மோட்டார் அறைகள், 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 3 ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியையும், 1,010 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புடன் கூடிய பொது குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் தனிநபர் வீடுகளுக்கு பைப்லைன் அமைக்கப்பட உள்ளதையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சேந்திரக்கிள்ளைக்கு சென்ற கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, அங்கு ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் 3 மோட்டார் அறைகள், 3 ஆழ்துளை கிணறுகள், 703 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புடன் கூடிய பொது குடிநீர் குழாய் மற்றும் தனிநபர் வீடுகளுக்கு பைப்லைன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அப்பகுதியில் ரூ.5 லட்சம் செலவில் கட்டப்படும் பயணிகள் நிழற்குடையை பார்வையிட்ட அவர், பணிகளை விரைந்து முடிக்குமாறு அங்கிருந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் அப்பகுதியிலுள்ள குடிசை வீடுகளை கண்டறிந்து, அவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

அதன்பின்னர், புவனகிரி ஊராட்சி ஒன்றியம் மேல்அனுவம்பட்டு ஊராட்சி பகுதியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், பயனாளிகளுக்கு ஒவ்வொரு தவணை தொகை வழங்கும்போதும், அரசு நிர்ணயித்த அளவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என அலுவலர்கள் பார்வையிட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் வீடுகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கட்டிமுடிக்க வேண்டும் என பயனாளிகளுக்கும், அரசு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் கண்ணங்குடி ஊராட்சியில் சமுதாயக்கூடம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், சமுதாயக்கூடம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை தரமாகவும், விரைந்து செய்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து கண்ணங்குடி கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கண்ணன், உதவி செயற்பொறியாளர் குமதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், கிருஷ்ணமூர்த்தி, சிவஞானம், சுகுமார், சிகாமணி, சக்தி, உதவி பொறியாளர்கள் தமீம், கிருஷ்ணகுமார், சுரேஷ் மற்றும் கீரப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலா சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் கண்ணன் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலர் உடனிருந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு