செய்யாறு,
செய்யாறு அருகே குடும்ப தகராறில் மைத்துனர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
செய்யாறு டவுன் கொடநகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35), தொழிலாளி. இவருக்கும், செய்யாற்றைவென்றான் கிராமத்தை சேர்ந்த மீனா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு லதா என்ற மகள் உள்ளார். குடிப்பழக்கத்திற்கு ஆளாகிய ஆறுமுகம், மனைவி மீனாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால் மனமுடைந்த மீனா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செய்யாற்றைவென்றான் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி ஆறுமுகம், மாமியார் வீட்டிற்கு சென்று மீனாவை அழைத்து உள்ளார். அப்போது அங்கிருந்த மைத்துனர் ராமுவுக்கும் (22), ஆறுமுகத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், ராமுவை உருட்டு கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் ராமு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அனக்காவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.