கூடலூர்,
நீலகிரி மாவட்டத்தில் பகலில் வெயிலும், இரவில் பனிப்பொழிவும் என இருவேறு காலநிலை நிலவுகிறது. இதனால் வனப்பகுதியில் வறட்சி காணப்படுகிறது. பச்சை புல்வெளிகள் காய்ந்து விட்டன. மேலும் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் வனப்பகுதிக்கு தீ வைத்து வருகின்றனர். கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதியில் எரிய தொடங்கிய காட்டுத்தீ முதுமலை வனப்பகுதிக்கு பரவியது. இதனை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். இதேபோன்று கூடலூர் வன கோட்டத்தில் கூடலூர், ஓவேலி, நாடுகாணி தாவரவியல் மையம், தேவாலா, பிதிர்காடு, சேரம்பாடி வனச்சரகங்கள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதால் சமூக விரோதிகள் பல இடங்களில் தீ வைத்து விட்டு தலைமறைவாகி விடுகின்றனர்.
பலத்த காற்று வீசுவதால் தீ வேகமாக வனப்பகுதியில் பரவி வருகிறது. இந்த நிலையில் வனப்பகுதிக்கு தீ வைக்கும் நபர்களை கண்டறிந்து, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் வனத்துறை ஈடுபட்டுள்ளது. மேலும் தீ வைக்கும் நபர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.2 ஆயிரத்து 500 பரிசுத்தொகை வழங்கப்படும், தகவல் கொடுப்பவர்களின் பெயர், விவரம் காக்கப்படும் என்று வனத்துறை அறிவித்து உள்ளது. இதுகுறித்து கூடலூர் வனகோட்ட அலுவலர் ராகுல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளதாவது:-
கோடை காலத்தை பயன்படுத்தி வனப்பகுதிக்கு தீ வைக்கப்படுகிறது. இதனால் புல்வெளிகள் மற்றும் மரங்கள் எரிந்து நாசமாகி வருகின்றன. மேலும் வனவிலங்குகளின் வாழ்விடமும் அழிந்து வருகிறது. இதனால் காட்டுயானை, புலி, சிறுத்தைப்புலி போன்ற வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு ஊருக்குள் அதிகளவு வரும் அபாயம் உள்ளது. இதன் மூலம் மனித-வனவிலங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
கூடலூர் வன கோட்டத்தில் பரவி வரும் தீ மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக பிதிர்காடு வனச்சரகத்தில் அம்பலாமூலா பகுதியை சேர்ந்த சிவக்குமார், மாதவன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதேபோன்று நெலாக்கோட்டை போர்டு காலனியை சேர்ந்த கேத்தன், மடம்பன் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
எனவே இனி வரும் காலத்தில் வனப்பகுதிக்கு தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதிக்கு தீ வைப்பவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 பரிசுத்தொகை வழங்கப்படும். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். எனவே பொதுமக்கள் வனத்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.