தாம்பரம்,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதி மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் நோய் பரவாமல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அவர்கள் வசித்த பகுதியை சுற்றிலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சாலைகள் சீல் வைக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் நகராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதால் அந்த பகுதியில் உள்ள சாலைகள் சீல் வைக்கப்பட்டது.
இந்தநிலையில் செம்பாக்கம் நகராட்சியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளை சுற்றிலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் செம்பாக்கம் நகராட்சியில் மட்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த வீடுகள் உள்ள சாலைகள் மட்டும் சவுக்கு கம்பால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் இந்த பகுதிகளில் உள்ளவர்கள் சர்வ சாதாரணமாக வீட்டை விட்டு வெளியேறி அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று வருகிறார்கள். செம்பாக்கம் நகராட்சி பகுதியில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து செம்பாக்கம் நகராட்சியில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியை சுற்றிலும் 5 கி.மீ. சுற்றளவுக்கு முழுமையாக சீல் வைத்து, அங்குள்ள கடைகளை மூடவும், பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகளுக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் உத்தரவிட்டார்.
அதன்படி செம்பாக்கம் நகராட்சி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் சீல் வைக்கப்பட்டு, அனைத்து கடைகளும் மூடப்படும்.
பொதுமக்களுக்கு வாரத்துக்கு 2 முறை காய்கறிகளும், 1 முறை மளிகை பொருட்களும் நகராட்சி ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக செம்பாக்கம் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.