மாவட்ட செய்திகள்

3 பேர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர்: நகைக்காக பெண்ணை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

பரமத்தி அருகே நகைக்காக பெண்ணை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர் ஏற்கனவே 3 பேர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர் ஆவார்.

தினத்தந்தி

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்புச்சிபாளையம் காமாட்சி நகரை சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகன் இளங்கோவன் (வயது 27). கூலித்தொழிலாளி.

இவர் கடந்த 2011-ம் ஆண்டு கோவையில் பொக்லைன் எந்திர டிரைவராக பணியாற்றி வந்தார். அப்போது கோவை சூலூர் தாலுகா கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த காந்தாத்தாள் (35) என்ற பெண்ணுடன் இவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

ஆயுள் தண்டனை

இதையடுத்து காந்தாத்தாள், இளங்கோவன் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 5-ந் தேதி பரமத்தி அருகே உள்ள மின்னாம்பள்ளி விராலிகுட்டை பகுதியில் காந்தாத்தாள் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுதொடர்பாக பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இளங்கோவன் தனது கள்ளக்காதலி காந்தாத்தாளை கொலை செய்து 5 பவுன் நகைகளை கொள்ளை அடித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இளங்கோவனை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு நாமக்கல் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட இளங்கோவனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரத்து 500 அபராதம் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட இளங்கோவன் போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

3 பேர் படுகொலை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள தோப்பூரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி சிந்து (32). இவர், இவரது தாயார் சத்தியவதி (50), பாட்டி விசாலாட்சி (68) ஆகிய 3 பேர் நாமக்கல் முல்லை நகரில் கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந் தேதி படுகொலை செய்யப்பட்டு, 28 பவுன் நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த வழக்கில் இளங்கோவனுக்கு கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி நாமக்கல் கோர்ட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இளங்காவன் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டார். ஆயுள் தண்டனை பெற்ற இவர் ஏற்கனவே கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்