பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட மகளிர் திட்டம் மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார்பில் வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, 17 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.72 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், மகளிர் திட்டத்தின் சார்பில் வங்கிகள் மூலம் வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஒன்றியங்களை சேர்ந்த மொத்தம் 70 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2 கோடியே 42 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் முகாம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக கிராமப்புறங்களிலுள்ள பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து பால் கறவை மாடு வாங்குவது, தையல் கடை நடத்துவது, குடிசை தொழில் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்களை மேற்கொள்கின்றனர். இதன் வாயிலாக பெண்கள் அனைவரும் சுய சார்புள்ளவர்களாகவும், பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்தவர்களாகவும் விளங்குவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வங்கிகள் மூலமாக கடனுதவிகளை பெற்ற அனைவரும் தங்கள் தொழில்களை திறம்பட செய்து தங்கள் வாழ்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்றார்.
இதில் மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள், வாலிகண்டபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கலியம்மாள் அய்யாகண்ணு, துணை தலைவர் பவானி ரெங்கராஜ், யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை மேலாளர் அருண்பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.