நீடாமங்கலம்:
முழு ஊரடங்கையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கடைகள் அடைப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முழு ஊரடங்கையொட்டி நீடாமங்கலம் பகுதியில் அனைத்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. ரெயில்கள் வழக்கம்போல் இயங்கின. பஸ்கள் இயங்கவில்லை. முழு ஊரடங்கையொட்டி நேற்று இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், மருந்து கடைகள், பால் நிலையங்கள் இயங்கின. ஊரடங்கின் போது நீடாமங்கலம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
குடவாசல்
குடவாசல், எரவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அத்தியாவசியமான பால், மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. இதனால் கடைத்தெரு மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று முழு ஊரடங்கு என்பதால் காணும் பொங்கலை கொண்டாட முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி பகுதியில் பஸ்கள், ஆட்டோ, கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை. பால், மருந்து கடைகள் திறந்திருந்தன. ஓட்டல்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டியில் காசுக்கடை தெரு, பழைய பஸ் நிலையம், ரயில் நிலைய சாலை, புதிய பஸ் நிலையம், திருவாரூர் சாலை, அண்ணா சிலை ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களை திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் முழு ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் கூத்தாநல்லூர் பகுதிகளில் உள்ள லெட்சுமாங்குடி கடைவீதி சாலை, மேலக்கடைத்தெரு, பாய்க்காரத்தெரு, ஆஸ்பத்திரி சாலை, பெரிய கடைத்தெரு சாலை மற்றும் வடபாதிமங்கலம் கடைவீதி சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஊரடங்கின் போது கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
நன்னிலம்
நன்னிலம், பேரளம், சன்னாநல்லூர், பூந்தோட்டம், ஆண்டிப்பந்தல் ஆகிய பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஊரடங்கின் போது போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி
மன்னார்குடியில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அத்தியாவசிய சேவைகளை தவிர அனைத்து சேவைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனால் மன்னார்குடி கடைத்தெருக்கள் அனைத்தும் வாகன போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. பஸ்நிலையம், உழவர்சந்தை, கோவில்கள் என மக்கள் கூடும் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. பந்தலடி, பஸ் நிலையம், பெரியார் சிலை, காமராஜர் சிலை பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தடையை மீறி வாகனங்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
வடுவூர்
வடுவூரில் ஏரி, பறவைகள் சரணாலயமாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் காணும் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த சரணாலயம் மற்றும் பூங்கா மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அனுமதிக்கவில்லை. முழு ஊரடங்கால் காணும் பொங்கல் களையிழந்து காணப்பட்டது. மேலும் வடுவூர் பகுதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
வலங்கைமான்
வலங்கைமான் கடைத்தெரு மற்றும் ஆலங்குடி, அரித்துவாரமங்கலம், ஆவூர், கோவிந்தகுடி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் போக்குவரத்து இல்லாமலும், மக்கள் நடமாட்டம் இல்லாமலும் சாலைகள் வெறிச்சோடின. முழு ஊரடங்கால் காணும் பொங்கல் விழா களையிழந்து காணப்பட்டது.