ஸ்ரீவைகுண்டம்,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கே.டி.கே. நகரை சேர்ந்தவர் வெள்ளத்துரை (வயது 32) கூலித்தொழிலாளி. இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 11-ந் தேதி வெள்ளத்துரை வீட்டில் வைத்து விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளத்துரை நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார்.
ஸ்ரீவைகுண்டம் அருந்ததியர் காலனியை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் (30) என்பவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் விடுமுறைக்காக ஸ்ரீவைகுண்டம் வந்தார். இவர் தினமும் மதுகுடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரின் தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சிவராமகிருஷ்ணன் நேற்று வீட்டுக்கு அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயத்தாறு அருகே உள்ள பன்னீர்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம் மகன் வண்ணமுத்து (31) விவசாயி. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாம். இதனால் மனமுடைந்த வண்ணமுத்து நேற்று காலையில் ஊருக்கு வடக்கே உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வண்ணமுத்து உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் காமராஜர்நகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் தங்கையா (41) கூலித் தொழிலாளி. இவருக்கு ராஜேசுவரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். தங்கையாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.