வேலூர்,
வேலூர் மாநகராட்சி 43-வது வார்டில் உள்ள விருப்பாட்சிபுரத்திற்கு உட்பட்ட ரத்தினகவுண்டர் தெரு, கே.கே.நகர் போன்ற பகுதி மக்களுக்கு ஓட்டேரி ஏரியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன்மூலமும் குடிநீர் வழங்கப்படுகிறது.
தற்போது கோடைகாலம் என்பதால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீரின் அளவு குறைந்ததோடு, 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அந்தப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளிலிருந்தும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
இது குறித்து மாநகராட்சியில் புகார் தெரிவித்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் விருப்பாட்சிபுரம் மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வேலூர்-திருவண்ணாமலை ரோட்டில் வந்த பஸ்களை செல்லவிடாமல் சிறைபிடித்துக்கொண்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள், பாகாயம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.