வேட்டவலம்,
வேட்டவலத்தில் அரசு பஸ் ஒன்று கடைவீதியில் நேற்று காலை 7.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது. பழைய போலீஸ் நிலையம் அருகில் வந்தபோது பஸ்சில் திடீரென தீப்பிடித்தது. உடனே கீழே இருந்து பார்த்த பொதுமக்கள் டிரைவரிடம் இதுகுறித்து தெரிவித்தனர். உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.
இந்த தீயினால் பஸ்சில் ஒரே புகை மண்டலமாக காணப்பட்டது. உடனே அவசர அவசரமாக பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறி அடித்தப்படி கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அருகில் இருந்த கடைகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் டீசல் டேங்க் அருகே தீ எரிந்து கொண்டிருந்தது.
இதனால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பஸ்சில் மேலும் தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தடுத்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.