விக்கிரமசிங்கபுரம்,
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் சன்னதி தெருவை சேர்ந்தவர் சண்முக வேலாயுதம் (வயது 70). ஓய்வு பெற்ற மில் தொழிலாளி. இவரிடம் விக்கிரமசிங்கபுரம் அம்பலவாணபுரம் தெற்கு தெருவை சேர்ந்த முருகேசன் மனைவி ஸ்டெல்லா மேரி (38) என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வட்டிக்கு கடன் வாங்கியிருந்ததாகவும், இதில் 9 ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த பாக்கி தொகையை கேட்பதற்காக கடந்த 7-ந் தேதி இரவு சண்முகவேலாயுதம், ஸ்டெல்லா மேரி வீட்டுக்கு சென்றார். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஸ்டெல்லா மேரி மற்றும் அவருடைய மகன் தீபக் டேனியல் (19) ஆகிய இருவரும் சேர்ந்து சண்முக வேலாயுதத்தை கம்பால் தாக்கினர்.
இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து சண்முக வேலாயுதம் மகன் திருநாவுக்கரசு கொடுத்த புகாரின் பேரில், சண்முக வேலாயுதத்தை கம்பால் தாக்கியதாக ஸ்டெல்லா மேரி, தீபக் டேனியல் ஆகியோர் மீது விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் சண்முக வேலாயுதம் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலையில் இறந்தார். இதையடுத்து ஸ்டெல்லா மேரி, தீபக் டேனியல் ஆகியோர் மீது போடப்பட்டிருந்த வழக்கை, போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.