பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி, உடுமலை, அமராவதி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய 6 வனச்சரகங்களை கொண்டது. இங்கு சிறுத்தை, புலி, கருஞ்சிறுத்தை, யானை, காட்டெருமை, மான், கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதை தவிர அரிய வகை பறவை இனங்களும் உள்ளன.
இந்த நிலையில் வனவிலங்குகள் மற்றும் மர்ம நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க வனப்பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் பொள்ளாச்சி வனப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் ஒரு மரத்தில் சிறுத்தை மீது, கருஞ்சிறுத்தை உட்கார்ந்து இருப்பது போன்று காட்சி பதிவாகி உள்ளது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள், மாவோயிஸ்டுகள் மற்றும் மர்ம நபர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க பொள்ளாச்சி வனச்சரக பகுதிகளில் மட்டும் சுமார் 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்களில் பதிவான காட்சிகள் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வனப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த ஒரு கேமராவில் மரத்தில் சிறுத்தையின் மீது கருஞ்சிறுத்தை உட்கார்ந்து விளையாடுவது போன்று காட்சி பதிவாகி உள்ளது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் அவற்றின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.