கையில் உள்ள நவீன செல்போனில் உள்ள சென்னை நகர மேப்பை இயக்குகிறார். உடனே செல்போன் திரையில் போக வேண்டிய வழி தெரிகிறது. எந்த வழியில் போக வேண்டும்,எங்கெல்லாம் திரும்ப வேண்டும் என அது வழி சொல்லிக் கொண்டே வருகிறது. வழி அறிய அவருக்கு ஜி.பி.எஸ் உதவுகிறது.
ஜி.பி.எஸ் எனப்படும் ஏற்பாட்டின் கீழ் 24 அமெரிக்க செயற்கைகோள்கள் சுமார் 20,200 கிலோ மீட்டர் உயரத்தில் பூமியை ஓயாது சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவை தான் வழியறிய உதவுகின்றன.இவை அதற்கான வகையில் பூமியை நோக்கி ஓயாது சிக்னல்களை அனுப்பிக் கொண்டிருக்கும்.
அமெரிக்கா தனது பயன்பாட்டுக்காக 1973 ஆம் ஆண்டில் இந்த ஏற்பாட்டை உருவாக்கியது என்றாலும் உலகில் இந்தியா உட்பட எண்ணற்ற நாடுகள் இதைப் பயன்படுத்திக் கொள்கின்றன. அமெரிக்கா அதை அனுமதிக்கிறது. எனினும் தங்களுக்கு இஷ்டமில்லை என்றால் ஒரு நாட்டுக்கு அல்லது பல நாடுகளுக்கு இந்த ஜி.பி.எஸ் வசதி கிடைக்காமல் அமெரிக்காவினால் எந்த நேரத்திலும் தடுத்து விட முடியும்.
இந்தியா பல ஆண்டுகளாகத் திட்டமிட்டு ரூ.1,400 கோடி செலவில் சொந்தமாக ஜி.பி.எஸ். போன்ற ஓர் ஏற்பாட்டை உருவாக்கியுள்ளது. இந்தியா இதற்கு நாவிக் என்று பெயர் சூட்டியுள்ளது. நாவிக் திட்டத்தின் கீழ் இஸ்ரோ உயரே ஏழு செயற்கைகோள்களை பறக்கவிட்டுள்ளது. இவற்றில் ஏழாவதான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.2 செயற்கைகோள் இந்த ஆண்டு ஏப்ரல் 12- ந் தேதி உயரே செலுத்தப்பட்டது.
இவை ஓயாது சிக்னல்களை அனுப்பி வழி அறிய உதவிக் கொண்டிருக்கும். சொல்லப்போனால் இது அமெரிக்க ஏற்பாட்டை விடவும் துல்லியமானது. இந்த செய்ற்கைகோள்கள் சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே இருந்தபடி இந்தியாவைப் பார்த்துக் கொண்டிருக்கும்.
அமெரிக்க ஜி.பி.எஸ் ஏற்பாடு உலகம் தழுவியது. ஆனால் இந்தியாவின் அது போன்ற நாவிக் ஏற்பாடு இந்தியாவுக்கு மட்டுமானது. தவிர, இந்தியாவின் எல்லையிலிருந்து 1,500 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் இதன் செயல்பாடு இருக்கும். அந்த அளவில் அது மேற்கே சவூதி அரேபியா வரையிலும் வடக்கே சீனாவின் தென் பகுதியிலும் தென் கிழக்கே மலேசியா வரையிலும் செயல்படுவதாக இருக்கும்.
இமாசலப் பிரதேச மலைக்காடுகளில் ஒருவர் வழி தவறி விடுகிறார். அவர் எங்கு இருக்கிறார் என்பதை நாவிக் திட்டத்தின் கீழ் செயல்படும் கருவி காட்டி விடும். வங்கக் கடலில் அல்லது அரபுக் கடலில் ஒரு மீன்பிடிப் படகு வழி தவறிவிடுகிறது. நாவிக் கருவி மூலம் அந்த மீனவர் தாமிருக்கும் இடத்தை அறிய முடியும். மீட்புக் குழுவினருக்குத் தகவலும் அளிக்க முடியும். ஒரு லாரி நிறுவனத்தின் 50 லாரிகள் ஒவ்வொன்றும் இந்தியாவில் எந்தெந்த இடத்தில் உள்ளன என்பதை உட்கார்ந்த இடத்திலிருந்து அறிய முடியும். பஸ்களுக்கும் இது பொருந்தும்.
அது சரி, ஏற்கனவே அமெரிக்க ஜி.பி.எஸ் வசதியை நாம் பயன்படுத்திக் கொள்ள வழி இருக்கும் போது நாவிக் எதற்கு என்று கேட்கலாம்.
அமெரிக்க ஜி.பி.எஸ். ஏற்பாட்டை உலகில் கோடானு கோடி மக்கள் தினமும் அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படுத்தி வந்தாலும் உண்மையில் அமெரிக்கா போர்க் காரியங்களுக்காகத்தான் அதை உருவாக்கியது எதிரியின் இலக்குகளை எதிரிக்கே தெரியாமல் மிகத் துல்லியமாகத் தாக்குவதற்கு அமெரிக்காவுக்கு ஜி.பி.எஸ் ஏற்பாடு உதவி வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக் நாட்டுக்கு எதிராக அமெரிக்கா போர் நடத்திய போது வளைகுடா பகுதியில் நின்று கொண்டிருந்த அமெரிக்கப் போர்க்கப்பலானது குரூயிஸ் ஏவுகணை ஒன்றை ஏவியது. ஈராக்கின் ராடார் கருவிகளில் சிக்காமல் அந்த ஏவுகணை மிகத் தாழ்வாகப் பறந்து சென்று ஈராக்கின் பாக்தாத் நகரில் பாதுகாப்புத் தலைமைக் கேந்திரம் அமைந்த கட்டிடத்தைத் தாக்கி அழித்தது. இந்தத் தாக்குதலுக்கு ஜி.பி.எஸ் செயற்கைகோள்கள் உதவின. தவிர, இதற்கு மிகத் துல்லியமான மேப்புகளும் தேவை. அமெரிக்காவிடம் இவ்வித மேப்புகள் உள்ளன என்று சொல்லத் தேவையில்லை.
ஜி.பி.எஸ் ஏற்பாட்டில் அமெரிக்க செயற்கைகோள்கள் உயரே இருந்து அனுப்பும் சிக்னல்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒருவிதமாகவும் அமெரிக்கப் போர்ப்படைகளுக்கு அனுப்பும் சிக்னல்கள் வேறு விதமாக அதாவது மிகத் துல்லியமாகவும் உள்ளன.பிற நாடுகள் தங்களது போர்த் தாக்குதல்களுக்கு அமெரிக்க ஜி.பி.எஸ் ஏற்பாட்டைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தடுக்கவே இந்த ஏற்பாடு.
அமெரிக்கா நினைத்தால் ஒரு நாட்டுக்கு ஜி.பி.எஸ் வசதி கிடைக்காமல் செய்து விட முடியும் என்று குறிப்பிட்டோம். 1999 ஆம் ஆண்டில் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரின் போது அமெரிக்கா இப்படிச் செய்தது. எனவே தான் இந்தியா சொந்தமாக நாவிக் ஏற்பாட்டை உருவாக்கி அமல்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை நம்பியிருக்க விரும்பாமல் ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்து ஜி.பி.எஸ் மாதிரியில் கலிலியோ என்ற பெயரில் ஓர் ஏற்பாட்டை உருவாக்கிக் கொண்டுள்ளன. ரஷியா தனியே குளோனாஸ் என்ற பெயரில் ஓர் ஏற்பாட்டைச் செய்து கொண்டுள்ளது. சீனாவும் பெய்டூ என்ற பெயரில் ஓர் ஏற்பாட்டை உருவாக்கிக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் உலகம்தழுவியவை. ஜப்பான் இந்தியாவைப் போன்று பிராந்திய அளவிலான ஒரு முறையை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு நாடு துல்லியமான மேப்புகளைத் தயாரிப்பதற்கான நவீன செயற்கைகோள்களைப் பெற்றிருக்க வேண்டும். குரூயிஸ் ஏவுகணைகளைப் பெற்றிருக்க வேண்டும். மிக உயரத்தில் இருந்தபடி செயல்படுகின்ற செயற்கைகோள்களைத் தயாரிக்கும் திறனைப் பெற்றிருக்க வேண்டும். அப்படியான செயற்கைகோள்களை உயரே செலுத்துவதற்கான ராக்கெட்டுகளையும் பெற்றிருக்க வேண்டும். இந்த அத்தனை திறன்களும் இந்தியாவிடம் உள்ளதால் தான் நாவிக் திட்டம் சாத்தியமாகியுள்ளது.
இனி அடுத்து நாவிக் செயற்கைகோள்களை தக்கபடி பயன்படுத்திக் கொள்வதற்கான வகையில் வாகனங்களில் பொருத்துவதற்கான கருவிகள் தயாரிக்கப்பட வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் தனியார் நிறுவனங்கள் தயாரித்து அளிக்கும்.
பஸ், லாரி, டாக்சி, ஆட்டோ ரிக்ஷாக்கள் ஆகிய அனைத்திலும் ஜி.பி.எஸ் கருவிகளைப் பொருத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதற்குப் பதில் இனி நாவிக் கருவிகள் இடம் பெறும்.
நாவிக் திட்டம் போர்த்தாக்குதலுக்கும் உதவக்கூடியதே. நம்மிடம் நாவிக் திட்டம் உள்ளது என்பதை அறியும் போது நமது எதிரிகள் நம்மைத் தாக்கத் தயங்குவர். அந்த அளவில் நாவிக் திட்டம் நாட்டின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும். எனினும் போர் என்பது எப்போதோ நடக்கக்கூடியது. மற்றபடி நாவிக் திட்டமானது கோடானுகோடி இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பணியாற்றி வரும்.
- என்.ராமதுரை, அறிவியல் எழுத்தாளர்