சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லப்பாக்கம் பகுதியில் உள்ள பெரிய ஏரியில் குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கு மற்றும் ஏரியின் வடக்கு பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றிவிட்டு, அதுபற்றிய அறிக்கையை டிசம்பர் மாதத்துக்குள் அளிக்கும்படி தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள், சிட்லபாக்கம் ஏரியில் உள்ள குப்பை கிடங்கை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
800 டன் அளவு தேங்கி இருந்த குப்பைகளில் நேற்று வரை 600 டன்னுக்கும் மேலான குப்பைகள் அகற்றப்பட்டு விட்டது. இந்த பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா நேற்று காலை ஆய்வு செய்தார். அப்போது தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.