மாவட்ட செய்திகள்

தர்மபுரியில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு: மாடுகள் முட்டியதில் 15 பேர் காயம்

தர்மபுரியில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு நடந்தது. மாடுகள் முட்டியதில் 15 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

தர்மபுரி,

தர்மபுரி ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். அதன்படி தர்மபுரி பென்னாகரம் சாலையில் உள்ள டி.என்.சி. மைதானத்தில் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது.

இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் 300 பேருக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் இளங்கோவன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜெமினி ஆகியோர் தலைமையில்மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடு பிடி வீரர்கள் கீழே விழுந்து காயம் ஏற்படாத வகையில் மைதானத்தில் தென்னைநார் கழிவுகள் பரப்பப்பட்டு இருந்தன. மேலும் பார்வையாளர்கள் கூட்டத்திற்கு காளைகள் சென்று விடாமல் இருக்க 2 அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இதையடுத்து நேற்று காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதை மாவட்ட கலெக்டர் கார்த்திகா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் பிரதாப், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் அனைவரும் கலெக்டர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளையும், தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறிப் பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் அடக்க முயன்றனர். ஆனால் காளைகள் மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் திமிறிக் கொண்டு ஓடின. சில இளைஞர்கள் மட்டும் காளைகளின் திமிலை பிடித்து அடக்கினர். ஒவ்வொரு காளையும் களத்துக்கு வரும் போது ஒலிப்பெருக்கி மூலம் இந்த காளையை அடக்கினால் தங்க காசு, வெள்ளிக்காசு, ரொக்க பரிசு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று விழா குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டது.

பின்னர் பரிசுகளை பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் இளைஞர்கள் காளைகளை பிடிக்க முயன்றனர். ஆனால் யாருக்கும் பிடி கொடுக்காமல் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், அவர்களின் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன. சைக்கிள், டிரஸ்சிங் டேபிள், அயன் பாக்ஸ், சில்வர் அண்டா, குடம், டிராவல் பேக், ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. அதிக காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக மோட்டார் சைக்கிள், 2-வது பரிசாக ஸ்கூட்டர், 3-வது பரிசாக ஸ்கூட்டி ஆகியவற்றை அமைச்சர் கே.பி.அன்பழகன் சார்பில் வழங்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு மாலை 6.30 மணி வரை நடந்தது. தர்மபுரியில் முதல்முறையாக நடந்த ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். ஜல்லிக்கட்டையொட்டி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முடிவில் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்