மாவட்ட செய்திகள்

ஜனார்த்தன ரெட்டியின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு : பெங்களூரு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவு

நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்கம் பெற்ற வழக்கில் கைதாகி உள்ள ஜனார்த்தன ரெட்டியின் ஜாமீன் மனு மீது இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்குவதாக பெங்களூரு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

பெங்களூருவில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களுக்கு அதிகவட்டி தருவதாக கூறி ரூ.600 கோடி வரை, சையத் அகமது பரீத் என்பவர் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், நிதி நிறுவன அதிபர் சையத் அகமது பரீத் மீது அமலாக்கத்துறையில் உள்ள வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க பா.ஜனதா முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி ரூ.20 கோடி பேரம் பேசியதுடன், ரூ.18 கோடிக்கு 57 கிலோ தங்க கட்டிகளை பெற்றிருந்தார். மேலும் ரூ.2 கோடி பணமும் கைமாறி இருந்தது. இதுகுறித்தும் பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கூறி ஜனார்த்தனரெட்டிக்கு போலீசார் நோட்டீசு அனுப்பி இருந்தார்கள். இதையடுத்து, கடந்த 10-ந் தேதி அவர் விசாரணைக்கு ஆஜரானார். பின்னர் மறுநாள்(11-ந் தேதி) ஜனார்த்தனரெட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஜனார்த்தனரெட்டி சார்பில் ஜாமீன் கோரி, பெங்களூரு 1-வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி ஜெகதீஷ் முன்னிலையில் நடைபெற்றது. ஜனார்த்தனரெட்டி சார்பில் மூத்த வக்கீல் அனுமந்தராயா ஆஜராகி வாதாடினார்.

அப்போது அவர், இந்த வழக்கில் நிதி நிறுவன அதிபர் சையத் அகமது பரீத் உள்பட 4 பேருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது, ஜனார்த்தனரெட்டியின் உதவியாளர் அலிகானுக்கும் இடைக்கால முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, ஜனார்த்தனரெட்டிக்கும் ஜாமீன் வழங்க வேண்டும். விசாரணைக்கு ஆஜராக சென்ற ஜனார்த்தனரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்காக குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திலேயே 10-ந் தேதி இரவு முழுவதும் அவர் தங்க வைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜனார்த்தனரெட்டிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று வாதாடினார்.

உடனே குற்றப்பிரிவு போலீசார் சார்பில் ஆஜரான அரசு வக்கீல் வெங்கடகிரி, நிதி நிறுவன அதிபர் சையத் அகமது பரீத், பொதுமக்களிடம் பணம் வசூலித்து ரூ.600 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளார். அவரிடம் இருந்து தான் ஜனார்த்தனரெட்டிக்கு ரூ.20 கோடி கைமாறியுள்ளது. அதனால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது, அவர் ஜாமீனில் வெளியே வந்தால் சாட்சிகளை அழித்து விட வாய்ப்புள்ளது, என்று வாதாடினார். பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெகதீஷ், விசாரணையை நாளை(அதாவது இன்று) ஒத்திவைப்பதாக உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் ஜாமீன் மனு மீது இன்று(புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி ஜெகதீஷ் உத்தரவிட்டுள்ளார். இதனால் நேற்று ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ஜனார்த்தனரெட்டி ஏமாற்றம் அடைந்துள்ளார். இதற்கிடையில், பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜனார்த்தனரெட்டி சக கைதிகளுடன் பேசாமல் இருந்து வருவதாகவும், யாரையும் சந்திக்க விருப்பம் இல்லை என்று அவர் கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனார்த்தனரெட்டிக்கு கோர்ட்டு உத்தரவுப்படி வெளியில் இருந்து தான் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு