மாவட்ட செய்திகள்

ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு பன்றிக்காய்ச்சல்- கை கழுவுதல் விழிப்புணர்வு

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு பன்றிக்காய்ச்சல் மற்றும் கை கழுவுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தினத்தந்தி

திருச்சி,

திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர் பகுதிகளில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ள 6 பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வைரஸ் காய்ச்சலுக்காக 75-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில், ரெயிலில் இருந்து இறங்கி வரும் பயணிகளுக்கு பன்றிக் காய்ச்சல் மற்றும் கையை சுத்தமாக கழுவுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மாநகராட்சி சார்பில் நேற்று நடைபெற்றது.

ரெயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் நடந்த நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் உதய குமார் ரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வுக்காக மாநகராட்சி, ரெயில்வே அலுவலர்கள் மற்றும் குழந்தை ஏசு நர்சிங் பள்ளி மாணவிகள், அன்பு பாரா மெடிக்கல் சயின்ஸ் கல்லூரி மாணவர்கள், சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்கள் பலர் கலந்து கொண்டு ரெயிலில் வந்த பயணிகளுக்கு கைகளை அடிக்கடி கழுவுவதால் ஏற்படும் நன்மை குறித்தும், கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கும் சோப் அல்லது வேதிப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கொண்டு 15 முதல் 20 நொடிகள் கைகளை கழுவினால் கிருமிகளை கொன்று விடும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் ரெயில் பயணிகளுக்கு அங்கேயே கை கழுவ சோப் மற்றும் லிக்யூட்(சோப் ஆயில்) வழங்கப்பட்டு கையை சுத்தமாக கழுவ செய்தனர். இதில் 1000-க்கும் மேற்பட்ட ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநகர் நல அலுவலர் டாக்டர் ராஜேஸ்வரி, உதவி ஆணையர் தயாநிதி மற்றும் ரெயில்வே சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு