புதுச்சேரி,
பொங்கல் பண்டிகையின் 3-வது நாளாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்களுக்கு சென்று பொழுதுபோக்குவார்கள்.
அதன்படி நேற்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவையில் பெரும்பாலான தனியார் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்திருந்தன. இதேபோல் அந்த நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.
காணும் பொங்கலை கொண்டாட கிராமப்பகுதிகளை சேர்ந்த மக்கள் காலை முதலே கார், பஸ், சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிளில் நகரப்பகுதிக்கு படையெடுத்தனர். தாவரவியல் பூங்கா, கடற்கரையில் அவர்கள் குவிந்தனர்.
தாவரவியல் பூங்காவிற்கு வந்தவர்கள் சிறுவர் ரெயிலில் சவாரி செய்து மகிழ்ந்தனர். மீன் கட்சியகம், தாவரவியல் பூங்காவின் அழகினை கண்டு வியந்தனர். குழந்தைகள் அங்கு அமைக்கப்பட்டு இருந்த விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.
மதிய உணவினை சிலர் வீடுகளில் இருந்து கையோடு எடுத்து வந்திருந்தனர். அவர்கள் பூங்காவில் அமர்ந்து உண்டனர். சிலர் ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட்டனர். இதனால் ஓட்டல்களில் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
மாலையில் பொதுமக்கள் புதுவை கடற்கரை, பாண்டி மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு சென்றனர். கடலில் இறங்கி அவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளால் கடற்கரை பகுதி அலைமோதியது.
உள்ளூர் மட்டுமல்லாது கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வெளியூர் சுற்றுலா பயணிகளும் புதுவையில் வந்து குவிந்திருந்தனர். இதனால் மதுபான கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. காந்தி வீதியில் சண்டே மார்க்கெட்டில் செயல்படும் பெரும்பாலான கடைகள் நேற்று செயல்பட்டன. அதில் தங்களுக்கு தேவையான பொருட்களை மக்கள் வாங்கி சென்றனர். மாலை வேளையில் அவர்கள் வீடு திரும்ப பஸ் நிலையத்துக்கு வந்ததால் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
வழக்கமாக காணும் பொங்கலன்று பாரதி பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படும். ஆனால் காங்கிரஸ் போராட்டம் காரணமாக அது மூடப்பட்டுள்ளது. இதனால் பாரதி பூங்காவிற்குள் செல்ல முடியாமல் பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் ஏமாற்றமடைந்தனர்.