கோவில்பட்டி,
நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மதுரையில் இருந்து புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று நெல்லை சென்றார். இவருக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர எல்லையான தோட்டிலோவன்பட்டி விலக்கு ரோடு அருகில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வடக்கு மாவட்ட செயலாளர் அன்புராஜ் தலைமையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மன்சூர்அலி, தென் மாவட்ட பொறுப்பாளர் குபேந்திர பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்ரீபாலா, முன்னாள் ஒன்றிய செயலாளர் அதிகுமார், நகர இளைஞர் அணி செயலாளர் மாடசாமி, ஒன்றிய செயலாளர் வேல்முருகன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் வரவேற்பு கொடுத்தனர்.
வரவேற்புக்கு பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
நடிகர் கமல்ஹாசன் பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது அரசியல் குறித்து அவர் விமர்சனம் செய்து வருகிறார். தினமும் ஒவ்வொரு அறிக்கை வெளியிடுகிறார். கமல்ஹாசனின் விமர்சனங்களுக்கும், அறிக்கைகளுக்கும் அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர். அரசியல் குறித்து கருத்து கூறும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் கமல்ஹாசனின் அரசியல் கனவு ஒருபோதும் பலிக்காது.
தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடப்பது போன்று தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லையில், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறுகையில், தமிழக அரசு, சட்டசபையை எப்படி நடத்தப்போகிறது என்ற கேள்வி எழுந்தது. ஆனால் எதிர்கட்சிகளை சமாளித்து சட்டமன்றத்தை சிறப்பாக நடத்தி விட்டனர். தமிழகத்தில், நடிகர்கள் முதல்-அமைச்சர் ஆவது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவோடு முடிந்து விட்டது. இனிமேல் நடிகர்கள் முதல்-அமைச்சர் ஆக முடியாது. வேண்டுமானால் எம்.எல்.ஏ.வாக, எம்.பி.யாக ஆகலாம். குறிப்பாக கமல்ஹாசன் ஒருபோதும் முதல்-அமைச்சர் ஆக முடியாது என்றார்.