கோவில்பட்டி,
கோவில்பட்டி திருப்பதி நகரை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 62). இவர், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி கீதா. இவர்கள் இருவரும் கடந்த 29-ந்தேதி சென்னையில் வசிக்கும் தங்களது மகள் மீனாவின் வீட்டுக்கு சென்றனர். நேற்று அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 94 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் திருடப்பட்டு இருந்தன.
இதுகுறித்து சொக்கலிங்கம் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், டாக்டர் சொக்கலிங்கம் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் கைவரிசை காட்டி சென்றது தெரியவந்தது.
கைரேகை நிபுணர்கள் வந்து பீரோவில் பதிவான தடயங்களை சேகரித்தனர். இந்த துணிகர கொள்ளை குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்டர் வீட்டில் கதவை உடைத்து நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.