திருப்பத்தூர்,
பாண்டியநாட்டுத் திருத்தலங்களில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் என்ற திருத்தலத்தில் சிவலிங்கத்தை மூலவராக வைத்து 1919-ம் ஆண்டில் கட்டப்பட்டது மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம். சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் நந்தி பெருமானுக்கு 27 விரளி மஞ்சள் மாலையாக்கி அணிவித்தால் உடனடியாக மங்கல நிகழ்ச்சி வீட்டில் நடைபெறும் என்பது நம்பிக்கை. மதகுபட்டி அருகில் பெயரிலேயே மங்கலம் என்ற சொல் அமைந்த ஊர் காளையார் மங்கலமாகும்.
இந்த கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி ஏராளமான கலைநிகழ்ச்சிகளும், ஆன்மிக சொற்பொழிவுகளும், பட்டிமன்றங்களும், நகரத்தார் பெருமக்கள் ஏற்பாட்டில் நடந்தது.
விழா விழாக்குழுத்தலைவர் ஆர்.ராஜா, செயலாளர் என்.லட்சுமணன், பொருளாளர் கே.என்.சுப்ரமணியன், ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.சிதம்பரம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பொருளாளர் கே.என்.சுப்ரமணியன் சிவல்புரிசிங்காரத்திற்கு பொன்னாடை அணிவித்தார். ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் கலந்து கொண்ட செட்டிநாடு கிரிவலக்குழுத் தலைவர் சிவல்புரிசிங்காரம் பேசும்போழுது பலன்தரும் பரிகாரங்களைப் பற்றியும், வாழ்க்கையை வளமாக்கும் வழிபாடுகளைப் பற்றியும் எடுத்துரைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஒவ்வொருவரும் முறையாக வழிபாடுகளை மேற்கொண்டால் முன்னேற்றத்தின் முதல்படிக்கு செல்லலாம். அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வமென்று அவ்வையார் கூறி உள்ளார். அந்த அடிப்படையில் முதலில் தாய், தந்தையரின் ஆசி வேண்டும். பிறகு குலதெய்வம், முன்னோர், திசாபுத்தி, யோகாதிபதிக்குரியசிறப்பு வழிபாடு இவற்றை நாம் முறையாக கடைப்பிடித்தால் தடைக்கற்கள் படிக்கற்களாக மாறும். தனவரவு திருப்திகரமாக இருக்கும்.
காளைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் 2 ஊர்களில் ஒன்று காளையார் கோவில், மற்றொன்று காளையார் மங்கலம். இத்திருக்கோவில்களில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரரையும், நந்தி பெருமானையும் பிரதோஷ நேரத்தில் வழிபட்டால் எந்த தோஷம் இருந்தாலும் அது நம்மைவிட்டு அகலும். சந்தோஷம் நம்மை வந்து சேரும். நந்தியை வழிபட்டால் சிந்தித்த காரியங்களில் வெற்றிகிட்டும்.
நாம் பிறந்தது முதல் அந்திய காலம் வரை ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அர்ச்சனைகள், அபிஷேகங்கள் செய்துவருகிறோம். இதன் மூலம் விதியை மாற்ற முடியுமா என்று சிலர் கேட்பர். விதி என்பது விதிக்கப்பட்டது. அதை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் விதியின் வலிமையைக் குறைக்க இந்த வழிபாடுகள் நமக்குப் பலன் தருகின்றன.
அந்த அடிப்படையில் காசிமுதல் ராமேசுவரம் வரை எத்தனையோ திருக்கோவில்கள் உள்ளன. சாப விமோசனம் அடைய வைத்த ஊர் திருவாடானை, விதியும், மதியும் மாறிய இடம் திருக்கடையூர். இழந்ததை மீட்டுத் தர வழிபாடு வைத்துக் கொள்ள வேண்டிய ஆலயம் திருப்பாம்புரம். நமது ஜாதகப்படி யோகபலம் பெற்ற நாள் எது என்பதை கண்டறிந்து அன்றையதினம் நமக்கு அனுகூலம் தரும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
எல்லாவற்றிற்கும் மேலாக தினந்தோறும் விநாயகப் பெருமான் வழிபாட்டையும், பிரதோஷத்தன்று நந்தி வழிபாட்டையும், பவுர்ணமி அன்று செந்தீ வழிபாட்டையும் மேற்கொண்டாலே பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். பொதுவாக பிரதோஷ காலத்தில் நந்தியை வழிபடும் போது அதிக நற்பலன்கள் கிடைக்கும். நந்தி திருமணம் நடந்த இடம் திருமழபாடி. நந்தி மத்தளம் கொட்டிய இடம் திருவீழிமிழலை. நெய் நந்தியாகி நினைத்ததை நிறைவேற்றும் இடம் வேந்தன்பட்டி, விசுபரூப நந்தி தஞ்சை பெரிய கேவிலில் உள்ள நந்தி. அந்த அடிப்படையில் திருமணத் தடை அகற்றும் விதத்தில் மங்கலம் தர மஞ்சளை அணிவிக்க வேண்டிய நந்தி இருக்கும் இடம் காளையார்மங்கலம்.
இவ்வாறு அவர் பேசினார்.