மாவட்ட செய்திகள்

பெயிண்டர் கத்தியால் குத்திக்கொலை லாரி டிரைவர் கைது

பள்ளிபாளையம் அருகே பெயிண்டரை கத்தியால் குத்தி கொலை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

பள்ளிபாளையம்,

சேலம் மாவட்டம் சங்ககிரி அக்கம்மாபேட்டையை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(வயது26). இவர் நேற்று முன்தினம் இரவு தனது உறவுக்கார பெண் நந்தினியுடன் மோட்டார்சைக்கிளில் பள்ளிபாளையம் அருகே கிழக்குதொட்டிபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். வழியில் லட்சுமிபாளையம் கந்தன்நகர் பகுதியில் வரும் போது ரஞ்சித்குமாரின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. எனவே ரஞ்சித்குமார் மோட்டார்சைக்கிளை ரோட்டோரம் உள்ள ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வீட்டின் உரிமையாளரும், லாரி டிரைவருமான வாத்தியார் என்ற செந்தில்குமார்(43) என்பவர் அங்கு மோட்டார்சைக்கிளில் வந்தார். பின்னர் அவர் ரஞ்சித்குமாரை பார்த்து யார் நீ? ஏன் இங்கு நிற்கிறாய்? என கேட்டார். அதற்கு ரஞ்சித்குமார் பதில் சொல்லிக் கொண்டு இருந்தார். இந்தசமயத்தில் ரஞ்சித்குமார் மோட்டார்சைக்கிளின் சாவியை செந்தில்குமார் எடுத்துக் கொண்டு தர மறுத்தார்.

இதுபற்றி ரஞ்சித்குமார் கிழக்கு தொட்டிபாளையத்தை சேர்ந்த உறவினர்களான பெயிண்டர் கந்தசாமி(39), பரமேஸ்வரன்(30), வஜ்ரவேல், ரங்கநாதன் ஆகியோருக்கு செல்போன் மூலம் தகவல் கூறினார். உடனே அவர்கள் அங்கு விரைந்து வந்து என்ன நடந்தது? என்று செந்தில்குமாரிடம் விவரம் கேட்டனர். அப்போது செந்தில்குமார், சாதி பெயரை சொல்லி திட்டியதோடு தான் வைத்திருந்த கத்தியால் கந்தசாமியின் மார்பில் குத்தினார். இதை தடுக்க வந்த பரமேஸ்வரனையும் கத்தியால் குத்தினார். பின்னர் அவர் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதையடுத்து படுகாயம் அடைந்த கந்தசாமியையும், பரமேஸ்வரனையும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கந்தசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். பரமேஸ்வரனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்செங்கோடு போலீஸ் சூப்பிரண்டு ராஜு, பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் செந்தில்குமாரை கைது செய்தனர்.

இறந்த பெயிண்டர் கந்தசாமிக்கு கலாமணி, பிரியா என 2 மனைவிகளும், 4 குழந்தைகளும் உள்ளனர். ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கந்தசாமியின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த கொலை சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்