கோவை,
கேரளாவில் மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்தவர்கள், வனப்பகுதியில் பதுங்கி இருந்து கேரள போலீஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். வனத்துறையினரின் அலுவலகங்கள் மற்றும் வாகனங்களுக்கும் தீவைக்கப்படும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
தமிழகம், கேரளா, கர்நாடக எல்லைப்பகுதியான வயநாடு முச்சந்திப்பு பகுதியில் மாவோயிஸ்டு இயக்கத்தை பலப்படுத்த கடந்த சில நாட்களாக இந்த இயக்கத்தினர் முனைப்பு காட்டி வருகிறார்கள்.
மாவோயிஸ்டு இயக்கத்தினரை ஒடுக்குவதற்காக கேரள காவல்துறை சார்பில் தண்டர்போல்ட் அதிரடிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கேரள அதிரடிப்படையினரின் தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த அஜிதா, குப்பு தேவராஜ் ஆகிய 2 பேர் வயநாடு அருகே சுட்டுக் கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து இரு தரப்பினரிடையேயான மோதல்கள் அவ்வப்போது நடந்து வந்தன.
இந்நிலையில் நேற்று காலை தமிழக-கேரள எல்லைப்பகுதியான அகழி வனப்பகுதியில் மாவோயிஸ்டு இயக்கத்தின் முக்கிய நபரான காளிதாஸ்(வயது 47) என்பவரை துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கேரள போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
காளிதாசுக்கு சேகர் என்ற மற்றொரு பெயரும் உண்டு. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பண்ணையார்புரத்தை சேர்ந்த இவர் மீது தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி மற்றும் கரிமங்கலம் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. கடந்த 2001-ம் ஆண்டு கைதான காளிதாஸ், 2003-ம் ஆண்டு ஜாமீனில் விடுதலையாகி அதன்பின்னர் தலைமறைவாகிவிட்டார். இவர் தேடப்படும் குற்றவாளியாக கியூ பிரிவு போலீசாரால் அறிவிக்கப்பட்டு இருந்தார். கடந்த 2003-ம் ஆண்டு முதல் 14 ஆண்டுகளாக காளிதாஸ் தலைமறைவாக திரிந்து வந்தார்.
இவர் தொடர்பான தகவல்களை மலைக்கிராம பகுதி மக்கள் தெரிவிக்குமாறு தமிழக எல்லைப்பகுதியில் கேரள போலீசார் புகைப்படத்துடன் நோட்டீசுகளை ஒட்டி இருந்தனர். இந்தநிலையில் காளிதாஸ் மீசையை எடுத்துவிட்டு தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு கேரள வனப்பகுதியில் பதுங்கி இருந்தார். மாவோயிஸ்டு இயக்க கும்பலுடன் சேர்ந்து அவர் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு கேரள வனத்துறை அலுவலகம் மீது நடைபெற்ற தாக்குதலில் காளிதாஸ் மூளையாக செயல்பட்டவர் என்று கூறப்படுகிறது.
கைதான காளிதாசை கேரள அதிரடிப்படையினர், பாலக்காட்டுக்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.