பாடாலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் கீழக்கணவாய், செல்லியம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் தொடங்கும் மருதையாறு, புதுநடுவலூர் கிராமம் வழியாக பாய்ந்தோடி துறைமங்கலம், நெடுவாசல், சிறுவாச்சூர், கல்பாடி, பனங்கூர், கொட்டரை, கூத்தூர், பேரையூர், சில்லக்குடி ஆகிய கிராமங்களின் வழியே சென்று, அரியலூர் மாவட்டத்தில் வைப்பூர் என்னும் இடத்தில் கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது.
பெரம்பலூரில் மட்டும் சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு மருதையாறு ஓடுகிறது. மழைக்காலங்களில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடும்போது மட்டுமே இந்த ஆற்றில் தண்ணீரை பார்க்க முடியும். வெயில் காலத்தில் மணற்பரப்பாகவே இந்த ஆறு காட்சி அளிக்கும். மருதையாற்றின் கிளைகளாக பேரளி ஓடை, மூங்கில்பாடி ஓடை, சிறுகன்பூர் ஓடை உள்பட பல்வேறு சிறு ஓடைகள் உள்ளன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியதை காண முடிந்தது. இதேபோல் மருதையாற்றிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அந்த ஆற்றிலிருந்து பிரியும் வரத்து வாய்க்கால்களில் நீர் வழிந்தோடியது. சில இடங்களில் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் மருதையாற்று மழைநீரானது, பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் தெற்குமாதவி பகுதியில் உள்ள வயல்களுக்குள் புகுந்தது. இதனால் அங்கு விதைப்பு பணியை மேற்கொண்டிருந்த விவசாயிகள் கவலையடைந்தனர்.
மழைநீர் புகுந்ததால் வயல் பகுதிகள் குளம்போல் காட்சி அளித்தன. மேலும் அங்கிருந்த சாலையை வெள்ளநீர் சூழ்ந்ததால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மழைநீரில் தத்தளித்தபடி சென்றன.
மருதையாற்றின் மூலம் நூற்றுக்கணக்கான சிறு ஏரிகள் பாசன வசதி பெற்று, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது மருதையாறு ஓடும் வழிகளில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதோடு, ஆற்றின் வழித்தடமும் தூர்ந்துள்ளது.
எனவே, உடனடியாக சீமைக்கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்களை அகற்றி, வரத்து வாய்க்கால்களை தூர்வாரி பலப்படுத்தினால் தண்ணீர் வீணாவதை தடுக்கலாம். அவ்வாறு செய்வதன் மூலம் நீர்நிலைகள் நிரம்பி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைபெருக்கலாம்.