கரூர்,
கரூர் தொகுதி மக்கள் ஆதரவுடன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சூளுரைத்துள்ளார்.
ஹாட்ரிக் சாதனை
கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் நேற்று கவுரிபுரத்தில் வாக்குசேகரிக்க சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான திட்டங்களை கொண்டுவந்துள்ளார். மேலும் வாக்குறுதி கொடுத்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளார். அதனால்தான் ஹாட்ரிக் சாதனையாக எடப்பாடி பழனிசாமி தலைமையில், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. எல்லா மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக ஆட்சி நிறைவு செய்கின்றபோதே திட்டங்களை கொடுத்து, எதிர்க்கட்சிகளின் வாக்குறுதிகளை தவிடுபொடியாக்கி உள்ளார் முதல்-அமைச்சர். ரூ.12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி, 6 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுயஉதவிக்குழுக்கள் கடன் தள்ளுபடி இதுபோன்று ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.
உங்களில் ஒருவனாக...
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள், முதியோர் உதவித்தொகை ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்வு, வாஷிங்மெஷின் போன்ற திட்டங்களை செயல்படுத்துவார். இனிமேல் தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக கொடுக்கக்கூடிய திட்டங்கள் எதுவுமே இல்லை. செய்யக்கூடிய திட்டங்களை சொல்லிவிட்டு வாக்கு கேட்க வேண்டும். தி.மு.க. சொன்னால் எதையும் செய்யமாட்டார்கள்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னால் செய்வார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. என்மீது எந்த வழக்கும் கிடையாது. நான் போலீஸ் நிலையத்திற்கும், கோர்ட்டுக்கும் சென்றது கிடையாது. நான் உங்களில் ஒருவனாக இருப்பேன். நீங்கள் எப்போது கூப்பிட்டாலும் நான் வருவேன். தேர்தலில் கரூர் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.