அம்மாபேட்டை,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் விவசாயம், தொழில், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், விவசாய பணிகள் எந்தவித தொய்வுமின்றி தொடர உரம் விற்பனை நிலையங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டன.
எனினும் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த விதிகள் தொடர்ந்து அமலில் உள்ளதால் விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களை வாங்குவதில் விவசாயிகளுக்கு சிக்கல் நிலவியது. இதனை போக்கும் வகையில் அம்மாபேட்டையில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு நடமாடும் உரம் விற்பனை வாகனம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த வாகனத்தை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் நேற்று முன்தினம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்கள், விதைகள் குறித்து தகவல் தெரிவித்தால், விவசாய தோட்டங்களுக்கே நேரில் சென்று வினியோகம் செய்யப்படும். மேலும், வேளாண்மைத்துறை களப்பணியாளர்கள் நேரில் சென்று விதைகளையும் வழங்குவர் என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் எம்.எல்.ஏ. ராஜாகிருஷ்ணன், வேளாண்மைத்துறை துணை இயக்குனர் அசோக், உதவி இயக்குனர் கு.சீனிவாசன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணபவா, நிலவள வங்கி தலைவர் சுந்தரராசன், பேரூர் செயலாளர் செந்தில்குமார், ஊமாரெட்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஈஸ்வரமூர்த்தி, துணை தலைவர் பாலு, மாவட்ட பிரதிநிதி எஸ்.ராஜு, அண்ணா தொழிற்சங்க தலைவர் பூபதி, ஜெயலலிதா ஒன்றிய பேரவை செயலாளர் ராதா, வேளாண் அலுவலர் கார்த்திகா உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.