மந்திரி பதவி கிடைக்கும்
மந்திரி பதவி கிடைக்காததால் விஜயாப்புரா மாவட்டத்தை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. போர்க்கொடி தூக்கியுள்ளார். அவர் எடியூரப்பாவுக்கு எதிராக கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விஜயாப்புராவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மிரட்டும் தந்திரத்தை பின்பற்றுபவர்களை எடியூரப்பா மந்திரி ஆக்கியுள்ளார். புதிதாக மந்திரி பதவி ஏற்றவர்களில் ஒருவர் சி.டி.யை காட்டி மிரட்டியும், எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கு பணம் கொடுத்தும் மந்திரி ஆகியுள்ளார். 3 மாதங்களுக்கு முன்பு அந்த மிரட்டும் தந்திரத்தை பின்பற்றிய புதிய மந்திரி உள்பட 3 பேர் என்னை சந்தித்து, நீங்கள் முதல்-மந்திரியாக வேண்டும் என்று கூறினர்.
அப்போதாவது எங்களுக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று அவர்கள் என்னிடம் கூறினர். இதற்காக நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை செலவு செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
எடியூரப்பா அவமதித்துவிட்டார்
இதை கேட்டு நான் ஆச்சரியம் அடைந்தேன். எடியூரப்பாவை மிரட்டிய 3 பேரில் 2 பேருக்கு மந்திரி பதவி கிடைத்துள்ளது. ஒருவருக்கு முதல்-மந்திரியின் அரசியல் செயலாளர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. நான் யாரையும் மிரட்டுவது இல்லை. லிங்காயத்தில் பஞ்சமசாலி பிரிவை எடியூரப்பா தவறாக பயன்படுத்தியுள்ளார். பஞ்சமசாலி சமூகத்தை இட ஒதுக்கீட்டு பட்டியலில் 2ஏ பிரிவில் சேர்க்க வேண்டும்.
இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கூடலசங்கமத்தில் இருந்து பாதயாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பாதயாத்திரையை முடக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். லிங்காயத் சமூகத்தை எடியூரப்பா தவறாக பயன்படுத்துகிறார். தன்னை முதல்-மந்திரி பதவியை விட்டு கீழே இறக்கினால் பா.ஜனதா மேலிட தலைவர்களுக்கு எதிராக போராடுமாறு லிங்காயத் மடங்களை எடியூரப்பா கேட்டுக் கொண்டுள்ளார். இதற்காக மடங்களுக்கு ரூ.83 கோடி நிதியும் வழங்கினார். இதன் மூலம் லிங்காயத் சமூகத்தை எடியூரப்பா அவமதித்துவிட்டார்.
ராஜினாமா செய்ய வேண்டும்
இந்து கடவுள்களை அவமதித்தவர்களுக்கு மந்திரி பதவி கிடைத்துள்ளது. பிரம்மன், ராமர், சீதை ஆகியோருக்கு எதிராக அவதூறான முறையில் தகவல்களை பரப்பியவர்களுக்கு பதவி கிடைத்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நான், விஜயேந்திரா தலையீடு குறித்து பேசினேன். ஆனால் டெல்லி சென்ற எடியூரப்பா தன்னுடன் தனது மகன் விஜயேந்திராவை மட்டும் அழைத்து சென்றார். அவருக்கு பதில், மாநில தலைவர் மற்றும் மந்திரிகளை அழைத்து சென்று இருக்க வேண்டும்.
முன்னாள் முதல்-மந்திரிகள் நிஜலிங்கப்பா, வீரேந்திரபட்டீல், ஜே.எச்.பட்டீல் போன்ற பெரிய தலைவர்கள் லிங்காயத் சமூகத்தின் பெருமையை கட்டி காத்தனர். இதுபற்றி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் பேசினேன். லிங்காயத் சமூகம் இப்போது எடியூரப்பா பக்கம் இல்லை. எடியூரப்பா மீது நில முறைகேடு புகார்கள் உள்ளன. அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதனால் எடியூரப்பா தனது பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும்.
முடிவு தொடங்கிவிட்டது
மகர சங்கராந்தி பண்டிகை நாளில் இருந்து எடியூரப்பாவின் முடிவு தொடங்கிவிட்டது. முன்பெல்லாம் மந்திரி பதவி ஆட்சியை அமைக்க காரணமானவர்கள், சாதி, மாவட்டம் வாரியாக ஒதுக்கப்பட்டது. ஆனால் இப்போது 'சி.டி.'யை காட்டி மிரட்டியவர்கள், அத்துடன் பணம் இருப்பவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படுகிறது.
இவ்வாறு பசனகவுடா பட்டீல் யத்னால் கூறினார்.
சமீபகாலமாக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக பசனகவுடா பட்டீல் யத்னால் தொடர்ந்து பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.