புதுச்சேரி,
புதுவையை அடுத்து தமிழக பகுதியில் ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. வெளிநாட்டினர் அதிகம் வசித்து வரும் ஆரோவில் நகரம் உதயமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. இங்கு 164 நாடுகளை சேர்ந்த 2,500க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆரோவில் நிர்வாகம் சார்பில் இந்த நகரத்தின் 50-வது ஆண்டு பொன்விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இதற்காக அவர் இன்று காலை 9.30 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் காலை 10.30 மணியளவில் புதுவை வருகிறார். விமான நிலையத்தில் அவரை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், புதுவை கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி, பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர்.
விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் லாஸ்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை, சிவாஜி சிலை, ஏழை மாரியம்மன் கோவில், அஜந்தா சிக்னல் சந்திப்பு, எஸ்.வி.பட்டேல் சாலை, கடற்கரை சாலை, மரேன் வீதி வழியாக அரவிந்தர் ஆசிரமத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி செல்கிறார். அங்கு அரவிந்தர், அன்னை மீரா ஆகியோரின் சமாதிகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்.
சிறிது நேரம் அங்கு அவர் தியானத்தில் ஈடுபடுகிறார். பின்னர் ஆசிரமத்தில் அன்னை பயன்படுத்திய அறைகளை பார்வையிடுகிறார். அங்கிருந்து ஆசிரம பள்ளிக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு மாணவர்களுடன் சிறிது நேரம் உரையாடுகிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கடற்கரை சாலை, முத்தியால்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை, கொக்குபார்க், ராஜீவ்காந்தி சிலை, கோரிமேடு, இடையன்சாவடி வழியாக ஆரோவில் நகருக்கு செல்கிறார். அங்கு அரவிந்தர் சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதனை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட மாத்ரி மந்திரை அவர் திறந்து வைக்கிறார்.
அங்கிருந்து பாரத் நிவாசில் உள்ள கருத்தரங்கு கூடத்திற்கு மோடி செல்கிறார். அங்கு நடைபெறும் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக லாஸ்பேட்டை மைதானத்திற்கு வருகிறார். அங்கு நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். கூட்டம் முடிந்தவுடன் விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமரின் வருகையையொட்டி புதுவை முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் 4 கம்பெனி துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது வந்தால் அவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதமர் செல்லும் பாதையில் இரு புறமும் நேற்று காலை முதல் போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
பிரதமரின் வருகையையொட்டி அவரை வரவேற்கும் விதமாக அரசு சார்பில் பிரமாண்ட அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பா.ஜ.க. சார்பில் கிழக்கு கடற்கரை சாலை, திண்டிவனம் சாலை மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களின் கட்-அவுட், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் வருகையை முன்னிட்டு ஆரோவில் நகரை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு 3 நாட்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புதுவை மாநில காவல்துறை சார்பில் நேற்று காலை இறுதி பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.