பெங்களூரு: பெங்களூரு வர்த்தூர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் 36 வயது பெண் என்ஜினீயர் தனது கணவர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அந்த பெண் என்ஜினீயரின் வீடு 22-வது மாடியில் உள்ளது. இந்த நிலையில் அந்த பெண் என்ஜினீயர் தரைதளத்தில் இருந்து 22-வது மாடியில் உள்ள வீட்டிற்கு லிப்ட்டில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த லிப்ட்டில் இருந்த ஒரு முதியவர், பெண் என்ஜினீயருடன் பேச்சு கொடுத்தார். இந்த நிலையில் 15-வது மாடியில் லிப்ட் சென்றபோது பெண் என்ஜினீயரை முதியவர் திடீரென கட்டிப்பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் என்ஜினீயர், முதியவரை பிடித்து தள்ளி விட்டார்.
ஆனாலும் அந்த முதியவர், பெண் என்ஜினீயரின் உடல் பாகங்களை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இந்த நிலையில் வீட்டிற்கு சென்றதும் அந்த பெண் நடந்த சம்பவம் குறித்து தனது கணவரிடம் கூறி அழுது உள்ளார். இதன்பின்னர் நடந்த சம்பவம் குறித்து பெண் சார்பில் அவரது கணவர் வர்த்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சுபோத்குமார் சின்ஹா (வயது 68) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.