மாவட்ட செய்திகள்

முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

கோவிந்தா, அரோகரா கோஷங்கள் விண்ணதிர கொட்டக்குடி, முல்லைப்பெரியாற்றில் கள்ளழகர் இறங்கினார்.

தினத்தந்தி

உப்புக்கோட்டை:

வரதராஜ பெருமாள்

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உப்புக்கோட்டையில் வரதராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், 3 நாள் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது.

இதையொட்டி உற்சவர் கோவிலில் உள்ள வரதராஜபெருமாள் வீதி உலா வந்தார். அப்போது வரதராஜபெருமாளுக்கு பால், பன்னீர், சந்தன அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் வரதராஜபெருமாள், கள்ளழகர் வேடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த குதிரை வாகனத்தில் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்றார். வழிநெடுகிலும் பக்தர்கள் கள்ளழகரை வரவேற்று சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து முல்லைப்பெரியாற்றின் கரையில் உள்ள மூலவர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, நேற்று காலை 6 மணியளவில் பச்சைப்பட்டு உடுத்தி உப்புக்கோட்டை முல்லைப்பெரியாற்றில் கள்ளழகர் இறங்கினார்.

சுந்தரராஜ பெருமாள்

இதேபோல் முல்லைப்பெரியாற்றின் மேற்குக்கரையில் உள்ள உப்பார்பட்டி கிராமத்தில் சுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடத்தில், மூலவர் கோவிலில் இருந்து உப்புக்கோட்டை முல்லைப்பெரியாற்றில் இறங்கினார்.

ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் 2 குதிரை வாகனங்களில் கள்ளழகர் வேடத்தில் வரதராஜபெருமாளும், சுந்தரராஜபெருமாளும் எதிரெதிரே ஆற்றில் இறங்கியதை கண்ட பக்தாகள் பரவசம் அடைந்தனர்.

பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா கோவிந்தா கோஷங்கள் விண்ணை அதிர செய்தது.

எதிர்சேவையை தொடர்ந்து உப்புக்கோட்டை முல்லைப்பெரியாற்றின் கரையில் அமைக்கப்பட்டிருந்த நொச்சி இலைகளால் வேயப்பட்ட தற்காலிக மண்டபத்தில் கள்ளழகர் வைக்கப்பட்டார். அங்கு, கள்ளழகருக்கு அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

போடி சீனிவாச பெருமாள்

இதேபோல் சித்ரா பவுர்ணமியையொட்டி போடி சீனிவாச பெருமாள் மஞ்சள் பட்டு உடுத்தி, கையில் சாட்டையுடன் கள்ளழகர் வேடத்தில் தங்க குதிரையில் அமர்ந்து நேற்று காலை 6.30 மணி அளவில் மேளதாளங்கள் முழங்க கொட்டக்குடி ஆற்றில் இறங்கினார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, அரோகரா, பெருமாளே, என்ற கோஷங்களை எழுப்பினர்.

அதன்பிறகு தங்க குதிரையில் சீனிவாச பெருமாள் புதூர், வீரபாண்டிய கட்டபொம்மன் ரோடு, தேனி ரோடு, கீழத்தெரு, கோவில் மெயின் பஜார் உள்ளிட்ட இடங்களில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், பெரிய தீ பந்தங்களுடன் பெருமாளை வரவேற்று ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

சாமி தரிசனம்

பெருமாள் வீதிஉலா வந்த வழிநெடுகிலும் ஏராளமான பெண்கள் திரண்டிருந்தனர். அவர்கள் தட்டில், சர்க்கரை வைத்து, அதன் மீது சூடம் ஏற்றி தீபத்தை பெருமாளுக்கு காட்டி வழிபாடு செய்தனர்.

இதேபோல் தீப்பந்தம் ஏற்றி வந்தவர்களுக்கு நீர்மோர் மற்றும் குளிர்பானங்களை ஆண் பக்தர்கள் வழங்கினர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்த பெருமாள் கோவிலை வந்தடைந்ததும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை நாயுடு நாயக்கர் மத்திய சங்கத்தினர், ஸ்ரீ சீனிவாச பெருமாள் அன்னதான அறக்கட்டளை குழுவினர், தக்கார் சுரேஷ், போடி ஜமீன்தார் வடமலை முத்து ராஜபாண்டியன், ராணி பண்ணை உரிமையாளர் குமரன், அர்ச்சகர்கள் கார்த்திக், குமரேசன் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் போடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இயக்க பொறுப்பாளர் பிரபு, சங்கையா கோவில் பொருளாளர் சங்கர பாண்டியன், சொக்கையா சிவன் கோவில் நிர்வாகி பிச்சைமணி ஆகியோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?